வெள்ளி, 31 டிசம்பர், 2010

கடந்த பத்தாண்டுகளில் தமிழகம் -ஒரு பார்வை

2001



தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடந்து அதில் அ.தி.மு.க- வென்றதும், அதன் தொடர்ச்சியாக ஜெயலலிதா முதல்வர் ஆனதும், பின்னர் பதவி விலகி  ஒ.பன்னீர்செல்வம் பொம்மை முதல்வராக இருந்ததும், கலைஞர் கருணாநிதி கைது செய்யப்பட்டதும்  இந்த ஆண்டில்தான்


2002
  ஜெயலலிதா ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டு  ஜெயித்து  மீண்டும் முதல்வரானதும், பொடா சட்டத்தின் கீழ் வைகோ கைது செய்யப்பட்டதும், மதமாற்ற தடை சட்டம், வேலை நிறுத்த தடை சட்டம் நிறைவேற்றப்பட்டதும், மூப்பனார்  மறைவிற்கு பின்னால் அவரது மகன் வாசனால் நடத்தப்பட்ட தமிழ் மாநில காங்கிரஸ், மீண்டும் காங்கிரசில் இணைந்ததும் இந்த ஆண்டில்தான்.

2003
தைரியம் மற்றும் சாகச செயல்களுக்காக கல்பனாசாவ்லா விருதை தமிழக அரசு  அறிவித்ததும், இந்தியாவின் முதல் பெண்கள் கமாண்டர் படை தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதும், ஆறாவது தமிழ் இணைய மாநாடு சென்னையில் நடத்தப்பட்டதும் இந்த ஆண்டில்தான்

2004
கும்பகோணம் தீ விபத்து 


ஸ்ரீரங்கம்  திருமண மண்டபத்தில் தீவிபத்து 
வீரப்பன் கொலை 


சங்கராச்சாரியார் கைது
சுனாமி

ஸ்ரீரங்கம்  திருமண மண்டபத்தில் தீவிபத்து ஏற்பட்டு 51 உயிர்கள்  பலியானதும், கும்பகோணம் சரஸ்வதி வித்யாலயம் பள்ளியில் தீவிபத்து ஏற்பட்டு 90 குழந்தைகள் பலியானதும், சந்தன கடத்தல் மன்னன் வீரப்பன் சுட்டுக்கொல்ல பட்டதும், கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டதும், உலகமெங்கும் சுனாமி எற்பட்டுலட்சக்கணக்கான  உயிர்கள் மாண்டதும்  இந்த ஆண்டில்தான்

2005



டாக்டரு விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை ஆரம்பித்ததும், எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு ஞான பீட விருது வழங்கப்பட்டதும் இந்த ஆண்டில்தான்.


2006
சட்டப்பேரவை தேர்தல் நடந்து கலைஞர் மீண்டும்  முதல்வரானது இந்த ஆண்டில்தான்.

2007 



பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு உடல்ரீதியான தண்டனை வழங்க தமிழக அரசு தடைச்சட்டம் கொண்டு வந்ததும்,
ஈரோடு, திருப்பூர் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதும் இந்த ஆண்டில்தான்.

2008


தை முதல்நாளை தமிழ் புத்தாண்டாக தமிழக அரசு அறிவித்ததும், ரேசன் கடையில் ஒரு ரூபாய்க்கு ஒருகிலோ அரிசி வழங்கும் வழக்கம் தொடங்கப்பட்டதும் இந்த ஆண்டில்தான்.

2009 



தமிழக துணை முதல்வராக ஸ்டாலின் அறிவிக்கப்பட்டதும், கலைஞர் காப்பீடு திட்டம் தொடங்கப்பட்டதும், இலங்கையில் போர்  நிறுத்தம் கோரி, சாஸ்திரி பவனருகில்  முத்துக்குமார் தீக்குளித்து இறந்ததும் இந்த ஆண்டில்தான்.

2010




உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற்றதும், கலைஞருக்கு அதிக பாராட்டு விழா நடந்ததும், பதிவர் ரஹீம் கஸாலி பதிவுலகத்திற்குள் காலடி வைத்ததும் இந்த ஆண்டில்தான்(ஹி....ஹி.....)

பதிவு திருடர்கள் கவனத்திற்கு:
நண்பர்களே கொஞ்சம்சிரமப்பட்டு தொகுத்த பதிவு இது. தயவு செய்து சுலபமாக காப்பி& பேஸ்ட் செய்து உங்கள் தளத்தில் உங்களின் பதிவு போல இணைத்துவிட  வேண்டாம்.
இந்த பதிவு காப்பி ரைட் செய்யப்பட்டுள்ளது. மீறி யாராவது திருடினால் ஆப்புதான்.மன்னிக்கவும் காப்புதான். இதோ இதற்க்கான காப்புரிமை 

Copyright :: All Rights Reserved
Registered :: Sat Jan 01 10:41:03 UTC 2011
Title :: கடந்த பத்தாண்டுகளில் தமிழகம் -ஒரு பார்வை
Category :: Blog
Fingerprint :: e2463f953c32f29f11c77ca6fbe28d
4524994e0b28b1fb45a8556b733c1b6c24
MCN :: EG5N6-8Y3PD-WT8EN

வியாழன், 30 டிசம்பர், 2010

நான் விடைபெறுகிறேன் நண்பர்களே....


இதுவரை
நான் உங்களில் சிலருக்கு
மகிழ்ச்சியை தந்திருக்கலாம்
சிலருக்கு சோகத்தை தந்திருக்கலாம்
சிலருக்கு வேதனையை தந்திருக்கலாம்
சிலருக்கு சந்தோசத்தை தந்திருக்கலாம்
சிலருக்கு சங்கடத்தை தந்திருக்கலாம்
அனைவரிடமும் நான்மன்னிப்பு
கேட்டுக்கொள்கிறேன்.
இனி உங்கள் வாழ்நாளில் நான்
மீண்டும்  ஒருமுறை
வரவே மாட்டேன்.  
கனத்த இதயத்துடன்......
 இன்றோடு
நான் விடைபெறுகிறேன்
இப்படிக்கு
2010
விஸ்கி....மன்னிச்சுக்கங்க...டிஸ்கி:   சனியன் விட்டுச்சுன்னு வந்திருந்தீங்கன்னா.... அதுக்கு கம்பெனி பொறுப்பல்ல....

ரஜினியே வில்லனாக....

ரஜினிகாந்த் வில்லனாக நடித்ததில் எனக்கு பிடித்த மூன்று படங்கள்

ஆடு புலி ஆட்டம் 






16-வயதினிலே 





அவர்கள்
 

உங்களுக்கு பிடித்த படங்களை நீங்களும் சொல்லுங்களேன்.....

செவ்வாய், 28 டிசம்பர், 2010

அம்புட்டு நல்லாவா நான் எழுதுறேன்

2010-ஆம் ஆண்டிற்கான தமிழ்மணம் விருதுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து பதிவர்களிடையே ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டது உண்மை. நமக்கெல்லாம் எங்கே விருது  கிடைக்க போகுதுன்னு (நான் ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்க்கலாம் ன்னு  தான்) இருந்தேன். இருந்தாலும் இணைத்து வைப்போமே என்று கடைசி நேரத்தில் மூன்று பதிவுகளை இணைத்தேன். இதுதான் அந்த பதிவுகள்



 தமிழ்மொழி, வரலாறு, கலாச்சாரம், தொல்லியல் என்ற பிரிவில்.....


மாறிவிட்ட பழமொழிகள்



நகைச்சுவை, கார்டூன்  என்ற பிரிவில்.....
அரசியலில் யாருக்கு என்ன விருது கொடுக்கலாம்-ஒரு பரிந்துரை



பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள் என்ற பிரிவில்.....
இசைப்புயல் ரஹ்மானுடன் எனது நாள்



நேற்று வெளிவந்த முதல் சுற்று முடிவுகளை பார்த்தபோது நான் தேர்ந்தெடுத்த மூன்று பதிவுகளுமே இரண்டாம் கட்டத்திற்கு தேர்வாகி எனக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது.
அம்புட்டு நல்லாவா நான் எழுதுறேன்.(ஒரு வழியா டைட்டில பிடிச்சுட்டேன்).
என் பதிவுகளுக்கும் வாக்களித்து என்ன அடுத்த கட்டத்திற்கு அழைத்து சென்றிருக்கும் (வாக்களித்த) முகம் தெரியாத நண்பர்களுக்கு நன்றி...இதே சந்தோசத்தை இரண்டாம் கட்ட வாக்கெடுப்பின் போதும் தருவீர்கள் என்ற நம்பிக்கையில் விடை பெறுகிறேன்.

திங்கள், 27 டிசம்பர், 2010

வெங்காயமும்-ராசாவும்

 நான் இப்ப உங்களுக்கு ஒரு கத சொல்லப்போறேன்.
ஒரு நாட்டுல ஒரு வெங்காய யாவாரி.சொந்தமா  வெங்காய விவசாயம் பண்ணி யாவாரம் பண்ணிக்கிட்டு இருந்தான். இப்பத்தான் வெங்காய வெல ஏறிப்போச்சா ஒருத்தன் கூட வாங்கல. அப்ப பக்கத்து நாட்டுல வெங்காயம்ன்னா என்னன்னே தெரியாம இருக்காங்கன்னு கூகல்ல தேடிட்டு இருக்கும்போது எதார்த்தமா கண்டுபுடுச்சான். அங்கே போயி யாவாரம் பன்னுவோம்ன்னு மூட்ட மூட்டையா வெங்காயத்த  எடுத்ததுக்கு கிளம்புனான். அங்கே போயி யாவாரம்  பண்ண ஆரம்பிக்கையில ரெண்டு பேரு வந்து
"தம்பி நீ இந்த நாட்டுக்காரனா?"
"இல்லன்னே...நான் பக்கத்து நாடு"
"பக்கத்து நாட்டு காரங்க இங்கே யாவாரம் பண்ணனும்னா எங்க ராசாட்ட அனுமதி வாங்கணும், தெரியும்ல"
"ராசாட்டயா? அவருதான் சி.பி.ஐ.விசாரணையில இருக்காரே"
"நான் சொல்றது எங்க நாட்டு ராசாட்ட"
உடனே யாவாரி அவ்வளவு வெங்காயத்தையும் எடுத்ததுக்கு அரமனைக்கு போனான். ராசாவ பாக்க...
அங்கேபோய் கேட்டான்
"ராசா இல்லையா?".
"இருக்காரு இந்த ராத்திரி நேரத்துல  எதுக்கு  நீங்க வரை பாக்கணும் "
"யாவார விஷயமா அவர பாக்கணும்"
"அவரு மானாட மயிலாடபாத்துக்கு இருக்காரு "-ன்னு சொல்லிட்டு இருக்கும்போதே கரண்டு போயிருச்சு. ஆனா இன்வெட்டர்ல லைட்டு எரிஞ்சுச்சு. ராசா வெளில வந்தாரு.
"என்ன தம்பி விஷயம்?"
"வெங்காய யாவாரம் பண்ணலாம்ன்னு வந்தேங்க...ஆனா....நான் உங்க நாட்டுல யாவாரம் பண்ணனும்னா  நீங்க பர்மிசன் கொடுக்கணுமாம்"
"ஆமா, வெங்காயம்னா என்ன தம்பி?"
"அதான் தெனமும் டி.வி-ல காட்டுறாங்களே? நீங்க பாத்தது இல்லையா?"
"நமக்கு அதுக்கெல்லாம் எங்கே நேரமிருக்கு...எப்போது நாடகம், கலை நிகழ்ச்சிதான். சரி தம்பி நீயே சொல்லு"
"வெங்காயம்னா....உரிச்சா கண்ணுல தண்ணி   வரும்,  வெலைய கேட்டா நெஞ்சு வலி வரும்"
"தம்பி நான்ராசா. என்கிட்டே வெலைய சொல்லாத....எனக்கு எத்தனை கோடி இருக்கும்ன்னு எனக்கே தெரியாது. ஒரு லட்சம் கோடிக்கு மேல இருக்கு...அதுனால வெலைய பத்தி நீ கவலை படாதே....விஷயத்தை மட்டும் சொல்லு.ஒரு வெங்காயமோ என்னவோ பேரு சொன்னியே அந்த பழத்த எடு சாப்புட்டு பாப்போம்"
"அது பழ ம் இல்லேங்க ராசா"
"அப்படின்னா காயா. பரவாயில்ல ஒன்னு எடு சாப்புடுறேன்"
"இது காயும் இல்ல."
"அப்பனா பூவா?"
"பூவும் இல்ல. உறிக்க உறிக்க ஒண்ணுமே இருக்காது"
"டே...என்ன விளையாடுறியா ஒண்ணுமே இல்லாத ஒன்ன, எங்க மக்கமேல கட்ட பாக்குறியா?யாரங்கே  முதல்ல இவன புடுச்சு தூண்ல கட்டுங்க"
"அய்யய்யோ ராசா கொஞ்சம் இருங்க...இது பூவா காயா பழமான்னு எனக்கே தெரியாது. இத வெறும் வாயில சாப்பிட முடியாது.சமையல்ல போட்டா கமகமன்னு இருக்கும்."
"அப்படியா, அப்படின்னா அது இங்கே இருக்கட்டும். நான் சமையல் செஞ்சு சாப்புட்டு சொல்றேன். உன்னோட போன் நம்பர கொடுத்துட்டு போ...நான் போன் போடுறேன்."
சரின்னு சொல்லிட்டு யாவாரி கிளம்பிட்டான்.
ரெண்டு நாளைக்கு அப்புறம் ராசாட்டேர்ந்து போன் வந்துச்சு. உடனே கிளம்பி வான்னு...இவனும் கிளம்பி போனான்.
"தம்பி உங்க வெங்காயத்தை சாப்பிட்டு பாத்தேன். நல்ல ருசி. நானே எல்லாத்தையும் எடுத்துக்கிறேன். அதுக்கு பதிலா இதை வச்சுக்க"ன்னு ரெண்டு மூட்டைய கொடுத்தாரு...அதுல பாத்தா தங்கமும் பணமும் இருந்துச்சு.
"ராசா.எல்லாம் எனக்குத்தானா? இந்த வெங்காயத்துக்கு இவ்வளவு பரிசா'"\
"என்ன இப்புடி சொல்லிட்டே...தங்கம் வைரத்த விட எனக்கு வெங்காயம் தான் பெருசு....எங்க நாட்டுல விலை மதிக்க முடியாத பொருளா வெங்காயத்தை அறிவிக்க போறேன். இதை எப்படி வெவசாயம் பண்றதுன்னு சொல்லிட்டு போயிரு..."
யாவாரி எல்லாத்தையும் சொல்லிக்கொடுத்தான். அவரு கொடுத்த காச வச்சுக்கு ஏகபோகமா வாழ்ந்தான். இத பாத்த பூண்டு யாவாரிக்கு பொறாம வந்துடுச்சு. நம்மளும் ராசாட்ட போயி நம்ம பூண்ட கொடுத்து இவன மாறி பெரிய பணக்காரனா ஆகிடனும்ன்னு     ஆசை வந்துச்சு. அவனும் மூட்ட மூட்டையா பூண்ட எடுத்ததுக்கு போயி ராசாவை பாத்தான். மேலே படிச்ச வெங்காய யாவாரிக்கு நடந்த அத்தனை விசாரணையும் பூண்டு யாவாரிக்கும் நடந்துச்சு. வச்சுட்டு போ சாப்புட்டி பாத்துட்டு உனக்கு போன் பண்ணுறேன்னு அவனை அனுப்பி வச்சாரு ராசா.
ஒரு நாளு அவனுக்கும் ராசாட்டேர்ந்து போன் வந்துச்சு. அவனும் வெங்காய யாவாரிக்கு  மாறி நம்மளுக்கும் நெறையா பரிசு தரப்போராருன்னு ஏகப்பட்ட கற்பனையோடு போனான்.
"தம்பி உங்க பூண்டை சாப்பிட்டு பாத்தேன். சும்மா சொல்லக்கூடாது. வெங்காயத்த விட இது இன்னும் நல்லாருக்கு...அதுனால உங்களுக்கு வெங்காய யாவாரிக்கு கொடுத்ததை விடை வெல உயர்ந்த பரிசை இந்த மூட்டைக்குள்ள வச்சுருக்கேன். எடுத்துக்கங்க"-ன்னு ரெண்டு மூட்டையை கொடுத்தாரு...
பூண்டு  யாவாரி அடடா நம்மளுக்கு அதிஷ்டம் அடிச்சுருச்சுன்னு நெனச்சுக்கு மூட்டைய பிரிச்சு பாத்தான். அங்கே....அவ்வளவும் வெங்காயம்.
"என்ன ராசா, வெல உயர்ந்த பரிசுன்னு சொன்னீங்க..ஆனா, எல்லாம் வெங்காயமா இருக்கு...."-ன்னு பரிதாபமா கேட்டான். அதுக்கு ராசா
"தங்கம், வைரத்த விட எங்க நாட்டுல இப்ப வெல உயர்ந்த, வெல மதிப்பில்லாத  பொருளு இந்த வெங்காயந்தான். அதான்  இதை கொடுத்தேன்"-ன்னு சொன்னாரு....
நீதி; இன்று நாட்டில் விலை மதிக்க முடியாத பொருளாக வெங்காயம்  இருக்கிறது.

சனி, 25 டிசம்பர், 2010

சூப்பர்ஸ்டார் ரஜினியை இயக்குனர் பாலச்சந்தர் எடுத்த பரபரப்பான பேட்டியின் வீடியோ உங்களுக்காக....

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்கள் சமீபத்தில் நடந்த இயக்குனர் சங்கம் நாற்பதாவது ஆண்டுவிழாவில் பேட்டி எடுத்திருந்தார். அதன் பரபரப்பான காணொளி இதோ....

ஜோடிப்பொருத்தம் பார்க்கலாம் வாரீங்களா?

 கீழே இருக்கும் படத்தில் ஒரு புறம் உங்கள் பேரையும் மறுபுறம் உங்களுக்கு பிடித்தமானவர்களின் பெயரையும் எழுதி பக்கத்திலிருக்கும்  GO பட்டனை தட்டுங்கள். நீங்கள் அவரை எவ்வளவு தூரம் நேசிக்கிறீர்கள் என்பது புரியும்.
இது சும்மா நகைச்சுவைக்காக மட்டும்.ஒருவேளை இந்த மீட்டர் குறைவாக காட்டி அதை  நிஜமென்று நம்பி உங்கள் பார்ட்னருக்கும் உங்களுக்கும் பிரச்சினை வந்தால்  அதற்கு நான் பொறுப்பில்லை.

வெள்ளி, 24 டிசம்பர், 2010

என்னது.....காந்திய கொன்னுட்டாங்களா?

1948 ஜனவரி 30ந்தேதி வரலாற்றில் ரத்தக்கறை படிந்த நாள். அன்று மாலை 4.30 மணிக்கு கோட்சே, ஆப்தே, கார்கரே ஆகிய மூவரும் ஒரு சாரட்டு வண்டியில் ஏறி பிர்லா மாளிகைக்குச் சென்றார்கள். 4.45 மணிக்கு பிர்லா மாளிகையை அடைந்தார்கள். பிர்லா மாளிகை பிரார்த்தனை மண்டபத்துக்கு காந்திஜி வரும் வழியில் படிக்கட்டின் அருகே நின்று கொண்டார்கள்.
காந்தி பிரார்த்தனை மண்டபத்தில் அமர்ந்து பிரார்த்தனை செய்யும்போது அவரை சுட்டுவிடவேண்டும் என்பதே கோட்சேயின் திட்டம். இப்போது அவன் திட்டத்தை மாற்றிக்கொண்டான். காந்தி பிரார்த்தனைக் கூட்டத்திற்கு செல்லும்போது வழியிலேயே சுட்டுவிடுவது நல்லது என்று இப்போது அவனுக்குத் தோன்றியது.
"காந்தி எப்போது வருவார்?" என்று மூவரும் படபடப்புடனும், பதைபதைப்புடனும் காத்திருந்தார்கள். வழக்கமாக சரியாக ஐந்து மணிக்கு பிரார்த்தனைக் கூட்டம் ஆரம்பமாகிவிடும். அன்றைய தினம் காந்திஜியை சந்தித்துப்பேச உள் விவகார மந்திரி சர்தார் பட்டேல் வந்திருந்தார்.
பட்டேலுக்கும், பிரதமர் நேருவுக்கும் அடிக்கடி கருத்து வேற்றுமை ஏற்படுவதும், அதுபற்றி அவர்கள் காந்தியிடம் முறையிடுவதும், இருவரையும் காந்தி அழைத்து சமாதானம் செய்வதும் வழக்கமாக இருந்தது. அன்றும் நேருவுடன் ஏற்பட்டுள்ள தகராறு பற்றி காந்தியிடம் பட்டேல் முறையிட்டார். "இருவரும் இவ்வாறு அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வது நல்லதல்ல" என்று பட்டேலிடம் காந்தி கூறினார். பிரார்த்தனைக் கூட்டத்துக்கு நேரம் ஆகிவிட்டதை ஆபா காந்தி நினைவூட்டினார்.
"நீங்கள் நாளை வாருங்கள். இதுபற்றி மீண்டும் பேசுவோம்" என்று பட்டேலிடம் காந்தி கூறினார். பத்து நிமிடம் தாமதமாக 5.10 மணிக்கு பிரார்த்தனைக் கூட்டத்துக்குப் புறப்பட்டார். பேத்திகள் மனு காந்தி, ஆபா காந்தி இருவரும் காந்தியின் இருபுறமும் வர, அவர்களுடைய தோள்களில் கை வைத்தபடி காந்தி நடந்தார். ஆபாவுடன் நகைச்சுவையாக பேசிக்கொண்டு சென்றார். பிரார்த்தனைக் கூட்டத்துக்கு சுமார் 500 பேர் வந்திருந்தனர். பத்து நிமிடம் தாமதமாகிவிட்டதால் காந்திஜி சற்று வேகமாக நடந்தார். கூடியிருந்தவர்கள் எழுந்து நின்று வணங்கி வழிவிட்டனர். பதிலுக்கு காந்தியும் கை கூப்பி வணங்கியபடி நடந்தார். காந்தி வழக்கமாக செல்லும் பாதை வழியே செல்லாமல் குறுக்குப்பாதையில் சென்றார். கோட்சே நின்ற பாதை வழியாகத்தான் அவர் செல்லவேண்டும். "நம் எண்ணம் எளிதாக நிறைவேறப்போகிறது" என்று நினைத்தான் கோட்சே.
யாரும் அறியாதவாறு இடுப்பிலிருந்த சிறிய துப்பாக்கியை எடுத்தான். இரு கைகளுக்கு இடையே அதை மறைத்துக்கொண்டான். சுடுவதற்குத் தயாராக விசையை இழுத்து வைத்தான். காந்தி நெருங்கியபோது கூட்டத்தை விலக்கிக்கொண்டு முன்னேறினான். காந்தியின் பாதங்களைத்தொட்டு வணங்கும் நோக்கத்துடன் அவன் வருவதாக மனு காந்தி நினைத்தார். யாரும் தன் காலைத் தொட்டு வணங்குவதை காந்தி விரும்புவதில்லை.
எனவே "வேண்டாம்! பாபு விரும்பமாட்டார்" என்று மனு காந்தி தடுத்தார். மனு காந்தியைப் பிடித்து அப்பால் தள்ளினான் கோட்சே. மனு காந்தியின் கையில் இருந்த காந்தியடிகளின் நோட்டுப்புத்தகம், ஜபமாலை, எச்சில் படிகம் ஆகியவை கீழே சிதறி விழுந்தன. அவற்றை எடுப்பதற்காக மனு காந்தி கிழே குனிந்தார். கண் மூடி கண் திறப்பதற்குள் காந்திக்கு எதிரே நின்று அவர் மார்பை நோக்கி மூன்று முறை சுட்டான் கோட்சே. குண்டுகள் குறி தவறாமல் காந்திஜியின் நெஞ்சில் பாய்ந்தன. இரண்டு குண்டுகள், நெஞ்சை ஊடுருவி முதுகு வழியாக வெளியே சென்று விட்டன. ஒரு குண்டு இருதயத்தில் தங்கிவிட்டது. முதல் குண்டு பாய்ந்ததும் காந்திஜியின் கால்கள் தடுமாறின.
இரண்டாவது குண்டு பாய்ந்ததும் ரத்தம் பீறிட்டு அவருடைய உடையை நனைத்தது. "ஹே...ராம்" என்று அவர் இரண்டு முறை சொன்னார். மூன்றாவது குண்டு பாய்ந்ததும் தரையில் ஈரமண்ணிலும், புல் தரையிலும் சாய்ந்தார். அப்போது மணி 5.17. இவ்வளவும் அரை நிமிடத்திற்குள் நடந்து முடிந்துவிட்டன. என்ன நடக்கிறது என்பதை உணரக்கூட சக்தியற்றவர்களாய் கூடியிருந்தவர்கள் அப்படியே திகைத்து நின்றார்கள்.
சுட்டவுடன் கோட்சே தப்பி ஓட முயற்சி செய்யவில்லை. புகையும் துப்பாக்கியுடன் அப்படியே சிலை மாதிரி நின்றான். காந்தி சுடப்பட்டார் என்பதை உணர்ந்ததும் சுற்றிலும் நின்றவர்கள் பாய்ந்து சென்று துப்பாக்கியுடன் நின்ற கோட்சேயைப் பிடித்துக் கொண்டனர். சிலர்"துரோகி! கொலைகாரா!" என்று ஆத்திரமாக கூக்குரலிட்டபடி அவனைத் தாக்கத் தொடங்கினார்கள். பலமாக தாக்கப்பட்ட கோட்சேக்கு முகத்தில் படுகாயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. இன்னும் சிறிது நேரம் ஆகியிருந்தால் அவன் அடித்துக் கொல்லப்பட்டிருப்பான்.
போலீசார் விரைந்து வந்து அவனை மீட்டு அங்கிருந்து இழுத்துச்சென்றனர். காந்தியைக் கோட்சே சுடுவதையும் குண்டு பாய்ந்து காந்தி கீழே விழுவதையும் சற்று தூரத்தில் இருந்து ஆப்தேயும், கார்கரேயும் பார்த்தார்கள். இனி அங்கிருப்பது ஆபத்து என்பதை உணர்ந்து பிர்லா மாளிகையில் இருந்து நழுவி வெளியே வந்தார்கள். ஒரு சாரட்டு வண்டியைப் பிடித்து அங்கிருந்து புறப்பட்டார்கள். பிரார்த்தனைக் கூட்டத்துக்கு வந்திருந்த பெண் டாக்டர் ஒருவர் காந்தி கிடந்த இடத்துக்கு ஓடோடி வந்தார்.
அவர் தலையை மடியில் வைத்துக்கொண்டு நாடித்துடிப்பை பரிசோதித்தார். காந்தியின் உடலில் உயிர் கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருந்தது. அவர் வாய் ஏதோ முணுமுணுத்தது. உடனே ஒரு தேக்கரண்டியில் தேனும், வெந்நீரும் அவருக்குக் கொடுத்தார்கள். அதற்குள் அவர் உயிர் பிரிந்துவிட்டது. தேனும், வெந்நீரும் வாய்க்குள் செல்லாமல் வெளியே வடிந்துவிட்டது.
டாக்டர் பார்க்கவா வந்து பரிசோதித்துவிட்டு, "காந்தி நம்மைப் பிரிந்துவிட்டார். உயிர் போய்விட்டது" என்று துயரத்துடன் அறிவித்தார். கூடியிருந்தவர்கள் கூக்குரலிட்டு அழுதனர். காந்தி மரணச்செய்தியை சரியாக மாலை 6 மணிக்கு அகில இந்திய ரேடியோ அதிகாரபூர்வமாக அறிவித்தது.

வியாழன், 23 டிசம்பர், 2010

உங்கள் போட்டோக்களை விதவிதமான டிசைன்களில் கொண்டுவர....


நமது போட்டோக்களை வித விதமாக டிசைன் செய்வதற்கு ஒரு அருமையான தளம் இது . அதை பயன்படுத்தி என் பையன் படத்தை வைத்து நான் டிசைன் செய்தவைகள் கீழே....


create animated gif


make gif


gif maker


gif maker


make gif

அதற்கான சுட்டி:
மேலிருக்கும் ஏதேனும் ஒரு  படத்தை கிளிக்செய்யுங்க...

புதன், 22 டிசம்பர், 2010

கலைஞர் கொடுக்காத பேட்டி



குறிப்பு: இது ஒரு மீள் பதிவு என்பதால் ஸ்பெக்ட்ரம், ராஜா போன்ற கேள்விகள் இடம்பெறவில்லை. 
அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வரும், தி.மு.க- தலைவருமான கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் மனம்திறந்து கொடுக்காத பேட்டி.

கேள்வி: உங்கள் குடும்பத்திலிருந்து அடுத்து பதவிக்கு வரப்போவது யார்?
கலைஞர்: அது துரை தயாநிதியாகவும் இருக்கலாம். அல்லது உதயநிதி ஸ்டாலின் ஆகவும் இருக்கலாம். அதை பொதுக்குழு செயற்குழு கூடி முடிவு செய்யும்.

கேள்வி: உங்கள் குடும்பத்திற்கே பதவி வழங்கப்படுகிறதே?
கலைஞர்: எம்.எல். ஏ., எம்.பி., மந்திரி என்று ஒவ்வொருவரையும் தனித்தனியே பார்க்க மக்கள் ஏன் அலையனும்?. ஒரே குடும்பத்தை சேர்ந்த எல்லோருக்கும் பதவி கொடுத்து விட்டால்...மத்திய, மாநில மந்திரிகளை ஒரே வீட்டில் சந்திக்கலாம் அல்லவா? அந்த அடிப்படையில் தான் என் குடும்பத்தினர் எல்லோருக்கும் பதவி கொடுத்துள்ளேன்.



கேள்வி:உங்களுக்கு மத்தியிலிருக்கும் செல்வாக்கை வைத்து மதுரையை தனிமாநிலமாக அறிவித்து அங்கு மு.க. அழகிரியை முதலமைச்சராக அறிவித்து விடுங்களேன்?
கலைஞர்: பன்னலாம்தான். அதன்பிறகு ராமதாஸ் அவர் மகனை முதலமைச்சராக்க வடமாவட்டத்தை பிரித்து கேக்க மாட்டார்ன்னு என்ன நிச்சயம்?

கேள்வி: மு.க.அழகிரி பாராளுமன்றத்திற்கு செல்லாமல் இருப்பதற்கு மொழி பிரச்சினைதான் காரணமா?
கலைஞர்: இதற்க்கு பதில் சொல்லும் முன்பு எதிர்கட்சியினருக்கு ஒரு சின்ன விளக்கம் சொல்லிக்க ஆசைபடுகிறேன். கருணாநிதி மட்டுதான் தமிழ் தமிழ் என்று சொல்லுறார். அவரு குடும்பத்து உறுப்பினர்கள் எல்லோரும் இங்க்லீஸ் இந்தி படிக்கறாங்கன்னு நா கூசாமல் சொல்லுகொண்டு இருக்கீங்களே, இதன் மூலமாவது ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள், என் குடும்பத்தினர் யாருக்கும் தமிழை தவிர வேறொன்றும் தெரியாது என்கிற விஷயத்தை. ஆங்...நீங்க என்ன கேட்டீங்க...
மொழி பிரச்சினையில் தான் அழகிரி பாராளுமன்றத்துக்கு போறதில்லைன்னு வடநாட்டுல அழகிரியின் வளர்ச்சி பிடிக்காதவங்க கிளப்பிவிடற புரளி . ஆனா அழகிரிக்கு இந்தியும் ஆங்கிலமும் தெரியாது என்பதை ஒத்துக்கறேன். அதுக்காக பயந்துட்டு அவரு போகாம இல்லை. நாங்களெல்லாம் இந்தியை எதிர்த்தே அரசியல் பன்னுனவுங்க. அவரு போகாத்ததுக்கு முக்கிய காரணம்.அழகிரி ஒரு இடைத்தேர்தல் ஸ்பெசலிஸ்ட் என்பதை எப்படியோ தெரிந்து கொண்ட
வடநாட்டு தலைவருல்லாம் அவருகிட்ட வந்து அங்கே இடைத்தேர்தல் நடக்குது நீங்க வந்து பிரச்சாரம் செய்யுங்க, இங்கே இடைத்தேர்தல் நடக்குது நீங்க பொறுப்பாளரா இருந்து ஜெயிக்கவைங்கன்னு தினமும் தொல்லையாம். அதான் பாராளுன்றத்துக்கு போறதில்லை.
கேள்வி: மின்வெட்டு ஒரு முக்கிய பிரச்சினையாக தெரிகிறதே?
கலைஞர்: இப்போது தமிழ்நாட்டில் மின்வெட்டு பிரச்சினையே இல்லையே? என் வீட்டிலோ அல்லது ஆற்காட்டார் வீட்டிலோ போய் பாருங்கள் உண்மை தெரியும்.

கேள்வி: உங்கள் வீட்டில் சரி பொது மக்கள் வீட்டில்?
கலைஞர்:அவ்வப்போது ஒருமணி நேரமோ ரெண்டுமணி நேரமோ.......

கேள்வி: மின்வெட்டு இருக்கும் என்கிறீர்களா?
கலைஞர்: இருங்க .... அவசரப்படாதீங்க......நான் சொல்ல வந்ததை முழுசா கேளுங்க.... ஒருமணி நேரமோ, ரெண்டு மணிநேரமோ மட்டும்தான் மின்சாரம் தலையை காட்டிவிட்டு போகும்னு சொல்ல வந்தேன்.

கேள்வி: மக்கள் கோபித்துக்கொள்ள மாட்டார்களா?
கலைஞர்: எப்படி கோபித்துக்கொள்ள முடியும்? எங்களுக்கு கலைஞர் டி.வி-யில் மானாட மயிலாட நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரத்தில் மட்டும் மின்சாரம் இருந்தால் போதும். மற்ற நேரங்களில் மின்சாரமே தேவை இல்லை. இதனால் எங்களின் மின்சாரக்கட்டணம் கணிசமாக குறைகிறதுன்னு சுமார் ஒரு கோடிப்பேர் கையெழுத்திட்டு மனு ஒன்றை கொடுத்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுதானே இது.

கேள்வி: போகுமிடமெல்லாம் விஜயகாந்த் உங்களை கடுமையாக விமர்சிக்கிறாரே?
கலைஞர்: குடித்துவிட்டு பேசுகிறார் என்று சொல்லி நான் இப்போது வகிக்கும் பதவியின் மரியாதையை கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை.

கேள்வி: ராமதாஸ் உங்களை கடுமையாக தாக்குகிறாரே?
கலைஞர்: உங்கள் கூட்டணியில் இருந்திருந்தால் என் மகன் மந்திரியாகி இருக்கலாம்.அந்த அம்மையாரை நம்பிப்போனது தப்புதான்.எப்படியாவது என்னை உங்கள் கூட்டணியில் சேர்த்துக்கங்க. நீங்கள்தான் அன்னை சோனியாவிடம் சொல்லி என்மகனுக்கு மந்திரிப்பதவி வாங்கிதரனும்ன்னு நேற்றுக்கூட ரகசியமாக தொலைபேசியில் பேசினார்.அதுபற்றி உங்களிடம் சொல்வது அரசியல் நாகரீகமில்லை.

கேள்வி:நடிகர் ரித்தீஸ்-க்கு சீட் கொடுத்துள்ளது பற்றி வெளியில் முணுமுணுக்கிறார்களே?
கலைஞர்: கானல் நீர், நாயகன் என்று இரண்டு திரைப்படத்தை இவ்வளவு செலவுசெய்து கலைஞர் டி.வி-க்காகவே எடுத்த வள்ளல் அவர்.ராமநாதபுரத்தில் நிற்க அவரைவிட தகுதியானவர் யார் இருக்கிறார்கள்?



கேள்வி: ரேசன் கடையில் ஒரு ரூபாய்க்கு வழங்கப்படும் அரிசி தரமானதல்ல என்று கூறப்படுகிறதே?
கலைஞர்: இந்த அரிசியை மக்கள் யாரும் சாப்பிடுவதில்லை. புழுத்துப்போன அரிசி என்றெல்லாம் விமர்சனம் செய்யும் எதிர்கட்சியினருக்கு ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். மக்கள் சாப்பிடமுடியாத அரிசியை ஏன் வெளிமாநிலங்களுக்கு கடத்தவேண்டும்? ஒரு ரூபாய்க்கு இ ங்கு விற்கப்படும் அரிசியை மற்ற மாநிலங்களுக்கு கடத்தி, மக்களே சாப்பிடவில்லையென்றால் எதற்காக பத்து ரூபாய்க்கும் பதினைந்து ரூபாய்க்கும் விற்கிறார்கள்? அந்த மாநில அரிசியை விட தமிழ்நாட்டில் விநியோகிக்கப்படும் அரிசி தரமானது என்று இப்போது தெரிகிறதல்லவா? கழக ஆட்சியில் விநியோகிக்கப்படும் அரிசி தரமானதாக இருந்து அதை தமிழ்நாட்டில் மட்டுமல்ல...வெளிமாநில மக்களும் சாப்பிட்டு பயனடைந்து இருக்கிறார்கள் என்று உங்களுக்கு பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன்.


கேள்வி: இளங்கோவன் போட்டு தாக்கறாரே?
கலைஞர்: என் மகனுக்கு புத்தி பேதலித்து விட்டது என்று அவரோட சொந்த அம்மா சுலோச்சனா சம்பத் ஒரு முறை சொன்னதுபோல நானும் சொல்லி அரசியல் நாகரீகத்தை இழக்க விரும்பவில்லை.

கேள்வி: காங்கிரசுக்கு மந்திரி பதவி கொடுத்து விட்டால் அவர் வாயை மூடி விடலாமே ?
கலைஞர்: நான் இவ்வளவு நாள் என் மனதில் போட்டு மூடிவைத்திருந்த ஒரு ரகசியத்தை இந்தக்கேள்வியின் முக்கியத்துவம் கருதி சொல்கிறேன். நாங்கள் ஆட்சிக்கு வந்த அடுத்த நிமிடமே சொக்கத்தங்கம் சோனியாவிடம் தொலைபேசியில் காங்கிரசுக்கு அமைச்சரவையில் இடம் தருகிறேன்னு சொன்னேன். அதுக்கு சோனியா அம்மையார் அமைச்சரைவையில் இடம் தருகிறேன் என்பதற்கு நன்றி. ஆனால் எந்த கோஷ்டி ஆளுகளுக்கு மந்திரி பதவி கொடுப்பது. ஒரு கோஷ்டிக்கு கொடுத்தால் இன்னொரு கோஷ்டியினர் அடித்துக்கொள்வார்கள். நீங்கள் அப்படி கொடுப்பதாக இருந்தால் ஐம்பது பேருக்கு அமைச்சர் பதவி தரவேண்டியிருக்கும்" என்றார். உடனே நான் அதிர்ச்சியாகி உங்கள் கட்சி எம்.எல். எ-க்கள் அவ்வளவு பேர் இல்லையேன்னு கேட்டேன். அதுக்கு சொக்கத்தங்கம் சோனியா "நிஜம்தான், அவ்வளவு பேர் இல்லைதான். ஆனால் அதைவிட அதிகமாக தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு கோஷ்டி இருக்கு. அதனால் மந்திரி சபையில் இடம் வேண்டாம்" என்று சொல்லிட்டார். இதற்க்கு நண்பர் தங்க பாலுவும் சாட்சி.




கேள்வி: ஜெயலலிதா போகுமிடமெல்லாம் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறதே?

கலைஞர்: இருக்கலாம்...நாடாளுமன்றத்தேர்தல் முடிந்து இந்த ஒன்றரை வருடத்தில் முதன்முதலாக மக்களை சந்திக்க வருவதால்..ஜெயலலிதா எப்படி இருக்கார் என்று பார்க்க வந்த கூட்டம்தானே தவிர, அவர் பேச்சை கேக்க வந்த கூட்டமல்ல...


கேள்வி: உங்கள் கட்சியில் காலங்காலமாக இருப்பவர்களை விட்டுவிட்டு மாற்றுக்கட்சியிலிருந்து வந்தவருக்கே பதவி வழங்குகிறீர்களே.?

கலைஞர்: அதான் நீங்களே சொல்லிட்டீங்களே...எங்கள் கட்சியில் காலம்காலமாக இருப்பவர்கள் என்று. அவர்கள் எங்கே போகப்போகிறார்கள்? பதவி கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் எங்களுடனே இருப்பார்கள். ஆனால், மாற்றுக்கட்சியிலிருந்து வந்தவர்களுக்கு பதவி கொடுத்தால்தான் இன்னும் நிறைய பேர் எங்க கட்சிக்கு வருவாங்க. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனமுண்டு என்று அண்ணா சொல்லியிருக்காரே...நாங்கள் அண்ணா வழி வந்தவர்கள்.


கேள்வி: அப்படியானால் ம.தி.மு.க-விலிருந்து வந்தவர்களுக்கு ஏன் கொடுக்கவில்லை?

கலைஞர்: நாங்கள் ம.தி.மு.க-வை ஒரு கட்சியாக நினைக்கவில்லை. ம.தி.மு.க-என்றால் மறுபடியும் தி.மு.க. என்று தானே அர்த்தம்.(சிரிப்பு)...


கேள்வி:ம.தி.மு.க-வின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது பற்றி?...

கலைஞர்: தம்பி வைகோ அண்ணா தி.மு.க-வின் கிளை செயலாளர் போல செயல்படுவதால் அவருக்கு எதற்கு தனியாக ஒரு கட்சியென்று தேர்தல் கமிஷன் நினைத்திருக்கலாம்(மறுபடியும் சிரிப்பு)

கேள்வி: கடந்த ஒருமாதமாக எந்த ஒரு பாராட்டு விழாவிலும் கலந்து கொள்ளவில்லையே?

கலைஞர்: அதை ஏன் கேட்கறீங்க...ஒரு மாசமா பாராட்டு விழாவே இல்லையென்பதால், அதைக்கூட பாராட்டி, பாராட்டுவிழா இல்லாத பாசத்தலைவன்னு ஒரு பாராட்டு விழா எடுக்கணும்ன்னு தம்பி ஜெகத் ரட்சகன் ஒரே அடம். நான்தான் மறுத்துட்டேன்.


கேள்வி: பம்பு செட் கொடுக்கறதா சொல்லியிருக்கீங்களே?

கலைஞர்:
ஆமாம். ஆளுக்கொரு டிராக்டர் கொடுக்கலாம்ன்னு தான் முதலில் நினைத்தேன், ஆனால், இப்ப நிதிநிலைமை சரியில்லாததால பாம்பு செட்டோட நிறுத்திக்கிட்டேன். அதில் கூட பாருங்க, பாம்பு செட் கொடுத்த பர்மனென்ட் தலைவன்னு ஒரு பாராட்டு விழா அடுத்தவாரம்
ஜெகத் ரட்சகன் தலைமையில துரைமுருகன் முன்னிலையில நடக்குது . தம்பி ரஜினி, கமல், வாலி, வைரமுத்து எல்லாம் கலந்துக்கறாங்க.

கேள்வி: இலங்கை பிரச்சினை பற்றி?

கலைஞர்: அதுபற்றி நேற்றுக்கூட சொக்கத்தங்கம் சோனியாவுக்கும், பிரதமர் ராகுல்காந்தி மன்னிக்கவும் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கும் ஒரு தந்தி அடிச்சாச்சே..உடன்பிறப்புகளையும் தந்தி அடிக்க சொல்லி முரசொலியில் ஒரு கடிதம் எழுதிட்டேனே,நீங்கள் படிக்கலையா?



கேள்வி: இலங்கை பிரச்சினைக்காக தந்தி அடிக்க சொல்லும் நீங்கள் மந்திரி பதவிக்காக டெல்லி செல்கிறீர்களே?
கலைஞர்: அப்படியல்ல..இப்போது ஆளாளுக்கு செல்போன் வச்சுக்கு எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்ன்னு அடிச்சுடறாங்க... அதனால தந்தி அடிப்பது குறைந்து போயி தபால் துறை நட்டத்தில் இயங்குதுன்னு அந்த துறைக்கு அமைச்சரா இருக்க தம்பி ராஜா கேட்டுக்கிட்டதால நான் தந்தி அடிக்க சொன்னேன். அன்னைக்கு மட்டும் தபால்துறைக்கு எவ்வளவு வருமானம்ன்னு கேட்டுப்பாருங்க.

கேள்வி: அப்படியென்றால் மந்திரிப்பதவி கேட்டும் ஒரு தந்தி அடிக்க வேண்டியதுதானே?
கலைஞர்: அடிக்கலாம்தான். ஆனால் நான் ஒருவன் தந்தி அடிப்பதாலென்ன பெரிய வருமானம் வந்துடப்போகுது? அதான் விமானத்துக்கு வருமானம் கொடுப்பமேன்னு கிளம்பிட்டேன். மக்களுக்கு நல்லது நடக்கனும்ன்னா உடல் நிலையைக்கூட கணக்கில் வைத்துக்கொள்ளாமல் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் போகலாம்.

கேள்வி: யாரோட மக்களுக்கு? அழகிரி, கனிமொழி போன்ற உங்களின் மக்களுக்கா?
கலைஞர்: யார் நீ? ஜெயா டி.வி. நிருபரா? முதல்ல வெளியபோய்யா. சரி பேட்டியை முடித்துக்கொள்வோம். . எனக்கு பொன்னர் சங்கர் படத்துக்கு கதை வசனம் எழுதும் வேலை இருக்கு.

செவ்வாய், 21 டிசம்பர், 2010

வலைப்பதிவு நண்பர்களுக்கு ஒரு விளக்கமும் பஞ்சும்...

அன்பார்ந்த வலைப்பதிவு நண்பர்களே....சில நண்பர்கள் எனக்கு பின்னூட்டம் போடும்போது, என் பெயரை ரஹீம் என்றே எழுதுகிறார்கள். ஆனால் என் பெயர் ரஹீம் அல்ல...கஸாலி தான் என்பதை தெளிவு படுத்த விரும்புகிறேன். அப்படியானால்....ரஹீம் என்பது யார்? என் தந்தையின் பெயர்தான் ரஹீம். எல்லோரும் தந்தையின் பெயரில் உள்ள முதல் எழுத்தை தலை எழுத்தாக அதாவது இன்ஷியலாக பயன் படுத்துவார்கள். எனக்கு அப்படி போடுவதில் உடன் பாடில்லாத காரணத்தினால் என் தந்தையின் பெயரையே இன்ஷியலாக்கி கொண்டேன். எனவே, என் பெயரை கஸாலி என்று அழைத்தாலே போதுமானது.
சரி விளக்கம் கொடுத்தாச்சு, இன்றைய கோட்டாவில் எதாவது பதிவிடனுமே?
பஞ்ச் டயலாக்கையே பதிவா போட்டுடலாம்ன்னு இருக்கேன்.

விஜய் படமும் திருமணமும்


திருமணம் என்பது விஜய் படம் பார்க்க தியேட்டருக்கு போறது மாதிரி.
வெளியில் இருக்கவன் உள்ளே போக நினைக்கிறான்.
உள்ளே இருக்கவன் வெளியே வர நினைக்கிறான்.

சரி படிச்சுட்டீங்களா? உங்கள் வாக்கை தட்டிட்டு, கருத்தை கொட்டிட்டு போங்க....

திங்கள், 20 டிசம்பர், 2010

பூனை(சிறுகதை)

காலை ஆறு மணி. அலாரம் அடித்தது. அதன் தலையில் நச்சென்று ஓர் அடிவைத்து அதன் சப்தத்தை நிறுத்தினேன். தூக்கம் கலையட்டுமென்று நினைத்து ஐந்து நிமிடம் கண்ணை மூடியவாறு படுத்திருந்தேன்.
"ஏங்க, அலாரம் அடிச்சு எவ்வளவு நேரமாச்சு? இன்னும் என்ன தூக்கம்?. சீக்கிரம் எந்திரிச்சு போயி குளிங்க. காபி கலந்து வைக்கிறேன்."
"இருடீ, இன்னும் கொஞ்ச நேரம் படுத்துக்கிறேன்."
"சரியாப்போச்சு போங்க. இப்படி தூங்கினா காரியம் நடந்த மாதிரிதான்."
"காலையிலே, ஏண்டி இப்படி அபசகுனமா பேசுறே? நான் என்ன போக மாட்டேன்னா சொல்றே. கொஞ்சம் லேட்டா போறேன்னுதானே சொல்றேன்."
"சரிதான், நீங்க லேட்டா போவீங்க. ஆனா அந்த ஆளு சீக்கிரம் கெளம்பி போய்ட்டார்னா, அப்புறம் போற காரியம் நடக்காது."
"சரிசரி கிளம்பறேன். காலைல சுப்ர பாதத்தை ஆரம்பிக்காதே."
"சுப்ரபாதமாம் சுப்ரபாதம்... இப்ப, எல்லாம் பேசுவீங்க. கல்யாணம் ஆன புதுசுல இதே வாய்தான் உன் பேச்சை கேட்டுக்கே இருக்கலாம்போலன்னு சொன்னிச்சு."
"ஐயோ கடவுளே தெரியாம சொல்லிட்டேன்மா. இப்ப என்ன? நான் குளிக்கணும் அவ்வளவுதானே. இந்தாப் போறேன்'
"நீங்க இந்தாப் போவீங்களோ, முஸ்லீமாப் போவீங்களோ எனக்கென்ன ஆச்சு?. இந்நேரம் தேவையில்லாம பேசிட்டு இருந்ததுக்கு குளிச்சிருக்கலாம். என்ன செய்றது எல்லாம் என் தலையெழுத்து இந்த புறாக்கூண்டு மாதிரி இடத்துல குடும்பம் நடத்தனும்னு."
"சரி விடேன். ஏன் புலம்பறே?"
"நான் எங்கே புலம்பறேன். என் தலை விதியை நொந்துக்கிட்டேன். இன்னைக்கு டவுன்ல குறைஞ்ச வாடகைக்கு எங்கே வீடு கிடைக்குது? வாடகையே யானை விலை, குதிரை விலை சொல்றாங்க. நம்ம மாதிரி மிடில் கிளாசுக்கு சொந்த வீடுங்கறது கனவுதான் போல."
"ஏண்டி உனக்கு மறை கிறை கழண்டு போச்சா?. காலங்காத்தால சம்பந்தமில்லாம பேசுறியே?'
"எல்லாம் சம்பந்தத்தோடதான் பேசுறேன். நமக்கு சொந்தமா வீடு வாங்கத்தான் வக்கில்லை. வாடகை வீட்லயாவது இருப்போம் ஒரு நல்ல வீடாப்பாருங்கன்னு நம்ம புரோக்கர்ட்ட சொன்னதுக்கு அப்புறம், கொறஞ்ச வாடகைல ஒரு வீடு இருக்குன்னு அவரும் சொல்லி ரெண்டு நாளாச்சு. அதைப்போயி பார்ப்போம்னு நினைச்சீங்களா?. அவனவன் வீடு கிடைக்காம அலையுறான். வீடு இருக்கிற விஷயம் யாருக்காவது தெரிஞ்சா, அவ்வளவுதான். புரோக்கருக்கு அதிகமா கமிசன் கொடுத்து அதை கொத்திக்குப்போக ரெடியா இருப்பாங்க. இப்பப்போறேன் அப்பப்போறேன்னு நீங்களும் இழுக்குறீங்க. இன்னைக்காவது போவீங்கன்னு பார்த்தா படுத்து தூங்கறீங்க."
"நானா போக மாட்டேன்னு சொல்றேன். அந்த புரோக்கர்தான் இன்னைக்கு காலைலே வரச் சொன்னார்."
"காலைலே வரச் சொன்னார்ன்னு தெரியுதுல்ல கிளம்புங்க."
"அதான் எந்திருச்சு குளிப்போம்ன்னு நினைச்சா, நீதான் ஓலைப் பயில ஏதோ உச்சா போன மாதிரி லொட லொடன்னு பேசிட்டு இருக்கியே..."
"ஏன் எதோன்னு சுத்தி வளச்சு சொல்றீங்க. நாயின்னு நேரடியா சொல்ல வேண்டியது தானே?"
"அம்மாடி காலைல இந்த ஆட்டத்துக்கு நான் வரலே. நான் போயி குளிக்கிறேன்".
குளிக்க பின்னால் இருக்கும் பாத்ரூமுக்கு போனேன். என் காலடி சத்தம்கேட்டு அங்கு படுத்துக்கிடந்த பூனை என் குறுக்கே ஓடியது.
'போச்சுடா. ஏற்கனவே அவ வேற கத்திக்கு இருக்கா. இப்ப இந்த சனியன் புடிச்ச பூனை வேற குறுக்கே போயிடுச்சா? காலைல இது முகத்துலையா  விழிக்கனும்?. இன்னைக்கு போற காரியம் விளங்குன மாதிரிதான். கடவுளே போற காரியம் நல்ல படியா நடக்கணும். நடக்காட்டி என் பொண்டாட்டி பிலுபிலுன்னு பிடிச்சுக்குவா ராச்சசி . போயிட்டு வந்து முதல் வேலையா இந்த சனியன் புடிச்ச பூனைய அடிச்சு துரத்தற வழிய பார்க்கணும்' என்று நினைத்தவாறு குளிச்சு முடித்தேன்.
ஒரு வழியாக புரோக்கரை சந்தித்து அவருடன் போய் வீட்டை பார்த்தேன். நன்றாகத்தான் இருந்தது. என் மனைவியிடம் கேட்டுவிட்டு அட்வான்ஸ் கொடுத்துவிடலாம் என்று அவரிடம் சொல்லிவிட்டு வீடு திரும்பினேன்.
"ஏங்க போன காரியம் என்னாச்சு?"
"நல்லபடியா முடிஞ்சுச்சு. வீடு ஓகே. நாலு மாச அட்வான்ஸ் கேக்கறான். எதுக்கும் உன்கிட்ட ஒருவார்த்தை கேட்டுட்டு..."
"இதுல என்கிட்டே கேக்கறதுக்கு என்ன இருக்கு? உங்களுக்கு பிடிச்சுருந்தா முடிச்சுட வேண்டியதுதானே?"
"இப்ப என்ன கேட்டு போச்சு? நாளைக்கு அட்வான்ஸ் கொடுக்கலாம். ஒண்ணும் அவசரமில்லை"
"வெயில்ல களைப்பா வந்துருக்கீங்க. கொஞ்சம் மோர் சாப்பிடுங்க. ஆங்... சொல்ல மறந்துட்டேங்க. நம்ம வீட்டையே சுத்திசுத்தி ஒரு பூனை வரும்ல..."
"ஆமா, அதுக்கென்ன இப்ப?"
"யார் முகத்துல விழிச்சுச்சோ பாவம்.. ரோட்ல போன கார்ல அடிபட்டு செத்துப் போச்சுங்க."
எனக்கு சுரீரென்று இருந்தது.

ஞாயிறு, 19 டிசம்பர், 2010

சின்ன சின்னதாய் இரு கவிதைகள்(மீ.ப)


ப்போதெல்லாம்
மிச்சமிருக்கும் சாதம்
கேட்டு வரும்
ராப்பிச்சைக்காரனிடம்
இல்லையென்ற
பதிலையே வழக்கமாக
சொல்கிறேன்.
அவனிடம் எப்படி சொல்வது
எங்கள் வீட்டில்
புதிதாக ப்ரிட்ஜ்
வாங்கிய விஷயத்தை?
======================================
சிறந்த பேச்சாளரென்று
ஊர் முழுக்க அறியப்பட்டவன்
ஊமையாகிறான்,
ஊமையிடம் பேச
முயற்சிக்கும்போது.......

சனி, 18 டிசம்பர், 2010

நான் அப்பாவானால்-சிறுகதை

(மீண்டும் ஒரு மீள்பதிவு சிறுகதை. என்னடா இவன் மீள் பதிவாகவே போட்டுக்கொண்டிருக்கிறான், சரக்கு இல்லையோவென்று நினைக்க வேண்டாம். நான் வலைப்பதிவுலகிற்கு வந்த புதிதில் எழுதிய சிறுகதை.நான் பிரபலமில்லாத காரணத்தால்  அப்போது பரவாலாக வாசகர்களை சென்றடைய வில்லை.இப்போது தான் நம்மளும் கொஞ்சம் பிரபலமாகி விட்டோம்ல....அதான் மறுபடியும் போட்டுப்பார்ப்போமேன்னு...ஹி...ஹி)...

ன்று ஞாயிற்றுக்கிழமை. காலையில் பேப்பர் பார்த்துக் கொண்டிருந்தவனை என்னுடைய எட்டு வயது மகனின் குரல் கலைத்தது.
"அப்பா... அப்பா..."
"என்ன வினோத். ஏன் இப்படி காலையில தொந்தரவு செய்றே? கொஞ்சம் பேப்பர் பார்க்கவிடேன்" என்று சொல்லிவிட்டு மகனின் முகத்தை பார்த்தேன். பாவம் வாடிப்போய் இருந்தது.
"சரி சரி சொல்லு."
"இல்லப்பா நம்ம இன்னைக்கு தாத்தாவ பாக்கப் போவமா?"
"தாத்தாவையா? இன்னைக்கு அப்பாவுக்கு கொஞ்சம் வேலை இருக்கு. அடுத்த வாரம் போவமா?"
"போங்கப்பா, போனவாரமும் இப்படித்தான் சொன்னீங்க. இன்னைக்கு போவோம். ப்ளீஸ்ப்பா"
இவன் இப்ப என்னை பேப்பர் படிக்க விடமாட்டான் என்று நினைத்து 'சரி' என்று தலையாட்டி வைத்தேன்.
அவன் என்னை அழைத்துப்போக சொல்வது முதியோர் இல்லத்தில் இருக்கும் என் அப்பாவிடம்.
என்னுடைய அம்மா இறந்ததற்கு பிறகு அப்பாவுக்கும் என் மனைவிக்கும் அவ்வளவாக ஒத்துப்போகவில்லை. எதற்கெடுத்தாலும் சண்டை. நானும் என் மனைவியும் கலந்து பேசி, அப்பாவை அருகிலிருக்கும் முதியோர் இல்லத்தில்
சேர்ப்பதென்று முடிவு செய்து, அதை அவரிடம் பக்குவமாக பேசி சம்மதம் வாங்கினேன்.
ஆரம்பத்தில் மறுத்தவர், பிறகு என்ன நினைத்தாரோ சரியென்று சொல்லிவிட்டார். அது ஆச்சு மூன்று வருடம். எப்போதாவது அவரைப் போய் பார்ப்பதோடு சரி. என் மகன் வினோத் என்றால் அவருக்கு உயிர். அவனுக்கும் தாத்தா என்றால் அவ்வளவு பாசம். இரண்டு மாதத்துக்கு முன் அவனது பிறந்தநாளுக்கு அவரிடம் ஆசி வாங்க அழைத்துப்போனேன்.

"என்னங்க யோசனை சீக்கிரம் குளிச்சுட்டு சாப்பிட வாங்க" என்ற என் மனைவியின் குரல் என் ப்ளாஷ் பேக்கை கலைத்தது.
குளித்து முடித்துவிட்டு சாப்பிட உட்கார்ந்தவனிடம் மீண்டும் நினைவுபடுத்தினான், வினோத்.
"அப்பா எப்ப போவோம்?"
"அதான் கூட்டிட்டு போகச் சொல்றானே கூட்டிட்டு போக வேண்டியதுதானே?"- என் மனைவியின் சிபாரிசு வேறு.
'எல்லாம் உன்னாலதாண்டி' என்று சொல்லநினைத்தேன். ஆனால் நான்
சாப்பிட்டுக்கொண்டிருந்த தோசையுடன் நான் சொல்ல நினைத்த வார்த்தையும் வயிற்றுக்குள் போனதே தவிர, பின்னர் வெளியே வரவேயில்லை.
"நீயும் வரியா?"
"நான் வரலே. எனக்கு வீட்டுல நிறைய வேலையிருக்கு."
நான் எதிர்பார்த்த பதில்தான். இந்த மூன்று வருடத்தில் நாலு தடவை மட்டும்தான் அவள் அப்பாவை பார்க்க வந்திருக்கிறாள்.
அவள் வர மறுப்பதற்கு காரணம் குற்ற உணர்ச்சியாக இருக்குமென்று நினைக்கிறேன்.
ஒருவழியாக நானும் வினோத்தும் ஒரு ஆட்டோ பிடித்து அங்கு போனோம். வினோத்தை பார்த்தும் என் அப்பாவின் முகத்தில் அவ்வளவு சந்தோசம்.
"அப்பா எப்படி இருக்கீங்க?"
"எதோ இருக்கேன்ப்பா" என்றவர் வினோத்தை கொஞ்சுவதிலேயே குறியாக இருந்தார்.
"வினோத் நல்லா படிக்கிறியா?. அப்பா அம்மாவுக்கு தொந்தரவு கொடுக்காமல் இருக்கணும். சரியா?"
"சரி தாத்தா"
கொஞ்ச நேரம் இருவரும் ஏதோதோ பேசிக்கொண்டிருந்தார்கள். நான் அந்த இல்லத்தை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
சிறிது நேரத்துக்கு பின் என் அப்பாவிடம் திரும்பிப்போனேன்.
"வசதிலாம் ஓகேவாப்பா?"
"ஒரு பிரச்னையும் இல்ல. என்ன ராத்திரியானா கொசுதான் ஓவரா கடிக்குது."
சரிப்பா அடுத்த தடவை வரும்போது கொசுவர்த்தி வாங்கிட்டு வாரேன். இப்ப கிளம்பறேன்ப்பா. எனக்கு வெளில வேலை இருக்கு."
"சரி பார்த்து போ. எதுல வந்தே? உன் பைக்லையா?"
"இல்லப்பா. கடுமையான வெயிலா இருக்குன்னு ஆட்டோல வந்தோம்."
"சரி கிளம்பு. வினோத் தாத்தாவுக்கு டாட்டா சொல்லு."
பிரிய மனமில்லாமல் வினோத்தை வழியனுப்பினார் அப்பா.
"அப்பா தாத்தாவும் நம்ம கூட வரட்டும்பா. நம்மட்ட வீடு இருக்கு, கார் இருக்கு, ஏ.சி.லாம் இருக்கு. அப்புறம் ஏம்ப்பா தாத்தா இங்கேருந்து கஷ்டப்படணும்?"
என் மகனின் திடீர் கேள்வியால் நான் தடுமாறிப்போனேன். இருந்தாலும் சமாளிப்பதற்க்காக சொல்லிவைத்தேன்.
"இல்ல வினோத். அப்பாவுக்கு கல்யாணம் ஆச்சுல்ல?"
"யார் அப்பவுக்குப்பா"
"உன் அப்பாவுக்குத்தான் வினோத். எனக்கும் உன் அம்மாவுக்கும் கல்யாணம் ஆகி நீ பொறந்தியா? அதான் நமக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாதுன்னு தாத்தா இங்கே வந்துட்டார். சரியா?"
"சரிப்பா. அப்படின்னா, எனக்கும் கல்யாணம் ஆகி, என்னை மாதிரி ஒரு புள்ளை பொறந்தா நீங்களும் இங்கேதானப்பா வருவீங்க?"
அந்தக்கேள்வி என்னை செருப்பால் அடித்ததுபோல் இருந்தது.

வெள்ளி, 17 டிசம்பர், 2010

ஒரு கவிதை- ஒரு சிறுகதை

ஒரு கவிதை(யாம்)

தயவு செய்து குப்பைகளை
குப்பைதொட்டியிலேயே கொட்டுங்கள்....
சுத்தத்திற்காக  இல்லாவிட்டாலும்.
குப்பைகளை பொறுக்கி வயிறு வளர்க்கும்
சிறுவர்களுக்காகவேனும்

================================================

                               
ஜுரம் (சிறுகதை மீள் பதிவு)

 "அடடே வா திலகா. என்ன இவ்வளவு தூரம்?"

"ஒண்ணுமில்லை புவனா, மூணு நாலா உன்னை பார்க்கமுடியலியே, அதான் சும்மா பார்த்துட்டு போகலாம்ன்னு..."
"அதுவா, என் பையனுக்கு உடம்பு சரியில்லை... அதான் வெளில வர முடியல."
"ஏன் என்னாச்சு பையனுக்கு?"
"சரியான ஜுரம். நெருப்பா கொதிக்குது உடம்பு. இருமல் வேற தொலைச்சு வாங்குது. சுருண்டு போய்ட்டான் குழந்தை."
"டாக்டர்ட்ட கூட்டிட்டு போனியா?"
"அதுல்லாம் ஆச்சு. மருந்து மாத்திரை கொடுத்துருக்காரு. ஆனா, ஒண்ணுக்கும் கட்டுப்படற மாதிரி தெரியல."
"இப்ப இருக்க காய்ச்சல சொல்ல முடியல, சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதே... இப்ப எங்க பார்த்தாலும் பன்னிக்காய்ச்சல், எலிக்காய்ச்சல்ன்னு பீதிய கிளப்புறாங்க. எதுக்கும் ரத்தத்தை எடுத்து டெஸ்ட் பண்ணி பார்த்துடேன்!"
"அதையும் பார்த்தாச்சு. அதுமாதிரி ஒன்னும் இல்லைன்னுட்டாரு டாக்டரு... வந்தவள உக்காருன்னு கூட சொல்லாம நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன். சரி என்ன சாப்பிடுறே திலகா?"
"அதுலாம் ஒண்ணும் வேண்டாம்."
"இல்ல ஏதாவது சாப்பிடு."
"உனக்கு எதுக்கு வீண் சிரமம் புவனா?"
"இதுல ஒரு சிரமமும் இல்ல. மாரியம்மா உள்ளேதான் இருக்கா, அவட்ட சொன்னா செய்ய போறா." என்றவாறு தன் வீட்டு வேலைக்காரியை அழைத்தால் புவனா.
"மாரியம்மா..!"
"என்னம்மா?"- சமையலறையிலிருந்து எட்டிப்பார்த்தாள் மாரியம்மாள்.
"ரெண்டு காபி கலக்கேன்."
"சரிம்மா"
"சொல்லு திலகா வேறென்ன சேதி?"
"ஒண்ணுமில்லை.ஆமா, உன் வீட்டுக்காரர் எங்கே ஆளைக்கானாம்?
"பையன்னுக்கு எழுதிக்கொடுத்த மாத்திரை முடிஞ்சுருச்சு. அதை வாங்க மெடிக்கல் சாப் வரைக்கும் போயிருக்காரு."
"அம்மா காபி" - காபி கொடுத்தவாறு பேசினாள் மாரியம்மாள்.
"அம்மா நீங்க ரெண்டுபேரும் பேசிட்டு இருந்ததை நான் கேட்டேன். நான் ஒண்ணு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே?"
"இல்லை மாரியம்மா சொல்லு."
"அம்மா எங்க ஊர்ல ஒரு பூசாரி இருக்காரு. அவருட்ட பையன கூட்டிட்டு போனா... அவரு துன்னூறு கொடுப்பாரு அதை வாங்கி சாப்பிடக்கொடுத்தா..."
"மாரியம்மா நீ குக்கிராமத்துக்காரி. உங்க கிராமத்துல ஹாஸ்பிடல் எதுவும் இருக்காது. அதான் வேற வழி தெரியாம பூசாரிகிட்ட துன்னூறு வாங்கி சாப்புடறீங்க. நீயும் அப்படித்தான் சொல்லுவே. லச்சக்கணக்குல பணத்தக் கொட்டி நாலு வருசம், அஞ்சு வருசம் அவனவன் டாக்டருக்கு படிச்சுட்டு ஹாஸ்பிடல், கிளினிக்குன்னு நடத்துகிறான்... நீ என்னடான்னா அந்தக்காலம் மாதிரி துன்னூறு, விபூதின்னு கதை சொல்லிட்டு இருக்கே."
"நான் எதிர்த்து பேசறேன்னு நினைக்காதீங்க. எங்க பக்கம் அவரு ரொம்ப கைதேர்ந்தவரும்மா. அவரு மந்திரிச்சு கொடுத்தா எந்த மாதிரி வியாதியும் பறந்துடும்மா."
"மாரி... உன் நம்பிக்கையை உன்னோடு வச்சுக்க. இதுலாம் எனக்கு நம்பிக்கை இல்லை."
"புவனா, மாரியம்மா சொல்ற மாதிரி ஒருதடவைதான் கூட்டிட்டு போய்த்தான் பாரேன்."
"என்ன திலகா நீ படிச்சவ மாதிரி பேசு. இந்த துன்னூறு விபூதி எல்லாம் சுத்த ஹம்பக். அவ சொல்ற மாதிரி எல்லா வியாதியும் அந்த துன்னூருல சரியா போச்சுனா, அப்பறம் டாக்டர் எதுக்கு? ஹாஸ்பிட்டல் எதுக்கு?"
"அப்படி சொல்லாதே. சில விஷயங்கள் உண்மை. நம்ம கண்ணுக்கு தெரியாம எவ்வளவோ விஷயங்கள் நடக்குது. அவதான சொல்றாளே? நிறையா பேருக்கு குணமாகிருக்குன்னு..?"
"குணமாகிருக்கலாம். நான் மறுக்கல... அதுக்குக் காரணம் அந்த பூசாரி கொடுத்த துன்னூறு இல்லை. வாங்குனவங்க மனசு.
அதாவது வியாதி அம்பது சதவீதம் மருந்தாலும், அம்பது சதவீதம் மனசாலும் குணமாகுது. வியாதி குணமாக மனசும் ஒரு முக்கியமான காரணம்."
"அதை நானும் ஒத்துக்கறேன். இருந்தாலும் நீயும் வியாதி குணமாகும் என்ற நினைப்போடு போய்த்தான் பாரேன்."
புவனா வேண்டாவெறுப்பாக தலையாட்டி வைத்தாள்.

"சரி மாரியம்மா நான் வர்றேன். இப்ப என் மகன் இருக்க நிலமையில அவனுக்கு நடக்கக்கூட தெம்பில்லை. நாளைக்கு போகலாமா?"
"நாம பையன கூட்டிக்கு போகணும்ன்னு கூட அவசியமில்லைம்மா. நம்மமட்டும் போயி பூசாரிட்ட விஷயத்தை சொல்லி துன்னூறு வாங்குவோம்."
"சரி எப்ப போகலாம்?"
"இன்னைக்கு சாயங்காலம் போவோம்மா."
"ஓகே. நீதான் கூட்டிட்டு போகணும்"
"சரிம்மா."
மாலை ஒரு வாடகை காரில் இருவரும் கிளம்பினார்கள்.
பூசாரியின் வீட்டு வாசலில் போய் கார் நின்றது.
காரிலிருந்து இறங்கிய மாரியம்மாள் பூட்டியிருந்த பூசாரி வீட்டு கதவை தட்டினாள்.
உள்ளிருந்து பூசாரியின் மனைவி எட்டிப்பார்த்தாள்.
"மாரியம்மாவா, வா... இது யாரு?"
"இது என் முதலாளியம்மா. பூசாரி அய்யா இல்லையா?"
"இல்லியே, அவரு பக்கத்துக்கு டவுன் வரைக்கும் போயிருக்காரு."
"எப்ப வருவாரு?"
"யாருக்கு தெரியும். டாக்டர பாத்த உடனே வந்துடுவாரு."
"டாக்டரா?"
"ஆமாம் மாரியம்மா. என் மகனுக்கு ரெண்டு நாளா ஒரே காய்ச்சல். அதான் டவுன்ல இருக்க டாக்டர்ட்ட காட்டிட்டு வரலாம்ன்னு அவன தூக்கிட்டு போயிருக்காரு. ஆமா நீங்க எதுக்கு வந்தீங்கன்னு சொல்லவே இல்லையே?"
================================================================

வியாழன், 16 டிசம்பர், 2010

காக்கா பிடிக்க போறீங்களா? --ஒரு நிமிஷம்

 ஒருவன் தன் சுய மரியாதையை விட்டுவிட்டு  எந்த நேரமும் எவனாவது ஒருவனுக்கு ஜால்ரா போட்டுக்கொண்டும், அடிவருடிக்கொண்டும் திரிவதை காக்கா பிடிப்பது என்போம். ஜால்ராப் போடுவதற்கும்  காக்காவிற்க்கும்  என்ன சம்பந்தம் என்று பார்த்தோமேயானால் ஒரு சம்பந்தமும் இல்லை. அப்புறம் ஏன் அதற்க்கு காக்கா பிடிப்பது என்று பெயர் வந்தது?
அதாவது காக்கை என்றால்  ஒருவனுக்கு கால் கை பிடிப்பது என்று அர்த்தம். கால் கை தான் காக்கை ன்று மாறி இப்போது காக்கா என்று வந்துவிட்டது. அதேபோல்தான் காக்கா வலிப்பும், கால் கை வலிப்பு தான் இப்போது காக்கா வலிப்பு என்று மருவி விட்டது. அவ்வப்போது இது போல சில தகவல்களையும் தருவேன். பொறுத்துக்கொள்ளவும்.

புதன், 15 டிசம்பர், 2010

அதென்ன மிசா அல்லது எமெர்ஜென்சி (இறுதி பாகம்)

 1980 ஜனவரியில் பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடந்தது. மீண்டும் ஆட்சிக்கு வர இது ஒரு அரிய சந்தர்ப்பம் என்பதை இந்திரா உணர்ந்திருந்தார். இந்தியா முழுவதும் மின்னல் வேக சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்தார். 62 நாட்களில் மொத்தம் 40 ஆயிரம் மைல் சுற்றுப்பயணம் செய்தார். இந்தத் தேர்தலில், இ.காங்கிரஸ் மகத்தான வெற்றி பெற்றது. பாராளுமன்றத்தில் மொத்தமுள்ள 525 இடங்களில் 351 இடங்களை இ.காங்கிரஸ் கைப்பற்றியது.

அதாவது, மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டி கிடைத்தது. பிரதான எதிர்க்கட்சியான சரண்சிங் தலைமையிலான மக்கள் கட்சி (ஜனதா) 41 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. உத்தரபிரதேசத்தில் உள்ள ரேபரேலி, ஆந்திராவில் உள்ள மேடக் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்ட இந்திரா காந்தி, இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். குறிப்பாக, மேடக் தொகுதியில், 2,19,091 ஓட்டு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார். இந்திராவுக்கு 3,01,465 ஓட்டுகளும், எதிர்த்துப் போட்டியிட்ட ஜெய்பால் ரெட்டிக்கு வெறும் 82,374 ஓட்டுகளும் கிடைத்தன. அமேதி தொகுதியில் போட்டியிட்ட சஞ்சய்காந்தி ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பிரதமராக இந்திரா காந்தி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜனவரி 14_ந்தேதி மந்திரிசபை பதவி ஏற்பு விழா நடந்தது. ஜெயில்சிங் (உள்துறை), ஆர்.வெங்கட்ராமன் (நிதி), பிரணாப் முகர்ஜி (வர்த்தகம்), பி.வி.நரசிம்மராவ் (வெளி விவகாரம்), ராவ் பிரேந்திரசிங் (விவசாயம்), கமலபதி திருபாதி (ரெயில்வே) உள்பட 14 பேர் காபினெட் மந்திரிகளாகவும், ஆர்.வி.சாமிநாதன் (விவசாயம்), ஜாபர் ஷெரீப் (ரெயில்வே) உள்பட 6 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவி ஏற்றனர். இவர்களுக்கு ஜனாதிபதி சஞ்சீவரெட்டி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

வருத்தம் தெரிவித்தார்
மீண்டும் பிரதமராகப் பதவி ஏற்ற இந்திரா காந்தி, நெருக்கடி நிலையின்போது நடந்த தவறுகளுக்காக வருத்தம் தெரிவித்தார். இனி இப்படிப்பட்ட தவறுகள் நடக்காது என்று உறுதி அளித்தார்.

இந்தத் தேர்தலில், தமிழ்நாட்டில் இ.காங்கிரசும், தி.மு.க.வும் கூட்டு சேர்ந்து போட்டியிட்டன. (அப்போது முதலமைச்சராக எம்.ஜி.ஆர். இருந்தார்) தி.மு.க _ இ.காங்கிரஸ் கூட்டணிக்கு மகத்தான வெற்றி கிடைத்தது. 24 இடங்களில் போட்டியிட்ட இ.காங்கிரஸ் 22 இடங்களில் வெற்றி பெற்றது. 16 இடங்களில் போட்டியிட்ட தி.மு.கழகம், 16 இடங்களிலும் வெற்றி பெற்றது. அ.தி.மு.க. கூட்டணிக்கு 2 இடங்களே கிடைத்தன.

தமிழ்நாடு தவிர மற்றும் 7 மாநிலங்களில் காங்கிரஸ் அல்லாத அரசுகள் தோல்வி அடைந்தன. தமிழ்நாடு உள்பட 8 மாநில அரசுகளையும் கலைத்து விட்டு தேர்தல் நடத்த, மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி தமிழ்நாட்டில் பதவியிலிருந்த எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க. அரசும், மற்றும் 7 மாநில அரசுகளும் கலைக்கப்பட்டன. இந்த மாநிலங்களில் தேர்தல் நடந்தது. தமிழ்நாட்டில் மீண்டும் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், மகாராஷ்டிரா, ஒரிசா ஆகிய மாநிலங்களில் இ.காங்கிரஸ் வெற்றி பெற்றது.
 இத்துடன் இந்த தொடர் நிறைவு பெறுகிறது
முந்தைய பாகங்கள்
பாகம்-1 , 2 , 3, 4, 5,6, 7 8
9



நண்பர்களே.....சில பத்திரிகைகளில் நான் படித்ததை தொகுத்து, இடையிடையே நான் கேள்விப்பட்ட விஷயங்களையும் சேர்த்து இந்த கட்டுரையை உங்களோடு பகிர்ந்து வருகிறேன்.நான் படித்த ஒரு விஷயம் இந்த தலைமுறையினர்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இந்த சிறு முயற்சியை  எடுத்துள்ளேன். தயவுசெய்து காப்பிரைட் பிரச்சினையை எழுப்பவேண்டாம்.
நிறைய நண்பர்கள் இந்த கட்டுரையை நான் எழுதுவதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.இது என் எழுத்து நடையே அல்ல....இந்த கட்டுரைக்கு நான் ஒரு தொகுப்பாளர் மட்டுமே....

செவ்வாய், 14 டிசம்பர், 2010

நானும் தமிழ்மணத்தில்.....


தமிழ்மணம் வலைப்பதிவு விருதுகள் 2010- இல் நானும் கலந்து கொண்டிருக்கிறேன். பதிவுலகில் எத்தனையோ ஜாம்பவான்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு மத்தியில் நம்ம என்னத்த கலந்துக்கு என்று நினைத்து சும்மாதான் இருந்தேன். கடந்த இரு தினங்களுக்கு முன் நம்ம நண்பர் பிலாசபி பிரபாகரன் அவர்கள் தமிழ்மணம் பற்றி ஒரு பதிவிட்டிருந்தார். அதில் போட்டியில் வெல்வதை விட கலந்துக்கொள்வதே முக்கியமானது என்று எழுதியிருந்தார். அதன் பிறகுதான் சரி நாமும் கல(ந்து)க்குவோம்ன்னு முடிவு பண்ணேன். கலந்துக்கலாம்ன்னு முடிவு பண்ணினேனே தவிர,  எல்லாமே நல்லாருக்கு(காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சல்லவா). ஜவுளிக்கடை விளம்பரம்போல எதை எடுப்பது...எதை விடுப்பதுன்னு ஒரே குழப்பம். அப்புறம் ஒரு வழியா எனக்கு பிடிச்ச  மூன்றை தேர்வு பண்ணினேன் உங்களுக்கும் பிடிக்கணுமே என்ற வேண்டுதலுடன்.....
 இதோ நான் தேர்வு செய்த முத்துக்கள் மூன்று...(ஹலோ....அது முத்தா...சொத்தையான்னு நாங்க சொல்லனும்ன்னு சொல்றீங்களா? அதுவும் சரிதான். அப்ப நீங்களே சொல்லுங்களேன்....)


 தமிழ்மொழி, வரலாறு, கலாச்சாரம், தொல்லியல் என்ற பிரிவில்.....
மாறிவிட்ட பழமொழிகள் என்ற கட்டுரையும்

நகைச்சுவை, கார்டூன்  என்ற பிரிவில்..... 

அரசியலில் யாருக்கு என்ன விருது கொடுக்கலாம்-ஒரு பரிந்துரை   என்ற கட்டுரையும்

பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள் என்ற பிரிவில்.....


இசைப்புயல் ரஹ்மானுடன் எனது நாள் என்ற கட்டுரையும் சமர்பித்துள்ளேன்.

 நீங்கள் வாக்களிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்தான் இந்த கட்டுரைகளை சமர்பித்துள்ளேன்.. தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, வெற்றிபெற  செய்து  என்னை ஊக்கப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

திங்கள், 13 டிசம்பர், 2010

உங்களுக்கு வடை வாங்க ஆசையா?- வாங்க சொல்லித்தாரேன்.

இப்போது பதிவர்களுக்கிடையே மிகப்பெரும் எழுச்சியே ஏற்பட்டிருக்கிறது என்றால் அது மிகையில்லை.

எதற்காக  இந்த எழுச்சி?. தமிழ்மணத்தில் சிறந்த பதிவு இருபதில் ஒன்றாக நம் பதிவு வரவேண்டும் என்றா?அல்லது  தமிழ்மணம் விருதுகள் 2010  -இல் நமது பதிவுகளும் விருது பெற வேண்டும் என்ற ஆசையிலா? அதுதான் இல்லை. எல்லாம் வடைக்கும், சுடுசோற்றுக்கும்தான்.



வடை,சுடுசோறு  என்று பதிவுலகம் சரவண பவன் ரேஞ்சுக்கு மாறிவிட்டது.  .

அதென்ன வடையும் சுடுசோறும் என்று கேட்பவர்கள் பதிவுலகத்திற்கு புதியவராக இருக்கவேண்டும். அதை தனியாக விளக்க முடியாது. படிக்க படிக்க உங்களுக்கே விளங்கிடும்.

முன்பெல்லாம் மீ பர்ஸ்டு, மீ செகண்டு என்றுதான் பின்னூட்டம் வரும். ஒரு பதிவை போட்டுட்டு கீழே பார்ப்பதுக்கு இடையில் நான் மேலே சொன்ன மீ பர்ஸ்டு, மீ செகண்டு என்ற  பின்னூட்டங்கள் வந்து விழும். அனால், இப்போது அதுவே கொஞ்சம் மாறி வடை சுடுசோறு என்றாகிவிட்டது.

இன்னும் சில நாளுக்கு பிறகு இதுவே போண்டா எனக்கு, பஜ்ஜி எனக்கு, கஞ்சி எனக்கு, கூழு எனக்குன்னு மாறினாலும் ஆச்சர்யப்படுதற்கில்லை. சரி நம்ம விஷயத்திற்கு வருவோம். நீங்கள் எப்படி வடை சுடுசோறு  வாங்குவது?


முதலில்ஒரு பேப்பர் எடுத்துக்கொள்ளுங்கள்.  தினமும், அல்லது ஒரு நாள் விட்டு ஒருநாள் பதிவு  போடும் பதிவர்களை அந்த  பேப்பரில்  குறித்து வைத்துக்கொள்ளுங்கள். வாரந்தோறும் அல்லது நாலு அஞ்சு நாளுக்கு ஒரு தடவை  பதிவிடும் பதிவர்களை விட்டுவிடுங்கள். அவர்களால் வாரத்துக்கு ஒரு வடையோ ஒன்னரை வடையோதான் கிடைக்கும்.



அடுத்து, அவர்கள் எத்தனை மணிக்கு பதிவிடுகிறார்கள் என்று பார்த்து அதையும் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். ரெண்டு மூன்று நாள் தொடர்ச்சியாக அவர்களை கவனித்து வாங்க...அந்த ரெண்டு மூணு நாளும் அவர்கள் போடும் பதிவு நீங்கள் ஏற்கனவே குறித்து வைத்த நேரத்துடன் ஒத்துப்போகிறதா என்று சரி பாருங்க....ஒரு அஞ்சு நிமிடம் முன்னே பின்னே இருந்தா பரவாயில்லை.



இனி நீங்கள் உபயோகபடுத்தும்  பிரவுசரை திறந்து கொள்ளவும். மொசிலா, இன்டர்நெட் எக்ஸ்ப்லோரர், கூகள் குரோம் என்று ஒன்றுக்கு மேற்பட்ட பிரவுசர்களை பயன்படுத்துபவராக இருந்தால் இன்னும் சிறந்தது.



ஒரே நேரத்தில் அனைத்து பிரவுசர்களையும் திறந்து கொள்ளுங்கள்.  அதில் ஏற்கனவே நீங்கள் குறித்து வைத்திருக்கும் பதிவர்களின் வலைப்பதிவு முகவரியை கொடுத்து ஒரு  பிரவுசருக்கு ஐந்து டேப் என்று திறந்து கொள்ளுங்கள்.



அடுத்து, வடை எனக்கே, போண்டா எனக்கே, பஜ்ஜி எனக்கே, சுடுசோறு எனக்கே என்று உங்களுக்கு பிடித்த வார்த்தையை டைப் செய்து, அதை காப்பி செய்து தயார் நிலையில் வைத்துக்கொள்ளுங்கள். இனி உங்கள் மின்னஞ்சல் முகவரியில்  உள் நுழைந்து அதையும் தயார் நிலையில் வைத்துக்கொள்ளுங்கள். (ஸ்பேம், அது இது என்று பயப்பட்டால் வடை உங்களுக்கு கிடைக்காது),



இனி ஏற்கனவே நீங்கள் திறந்து வைத்திருக்கும் ஒவ்வொரு டேப்பாக தட்டி பாருங்கள். யாரேனும் புது பதிவு போட்டிருக்கிறார்களா என்று. போட  வில்லையா, ஒவ்வொரு இரண்டு நிமிடத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு டேப்பையும் refresh செய்து கொண்டே இருங்கள்.



இப்போது யாரேனும் ஒருவர் புது பதிவை வெளியிட்டுருப்பார். உடனே அங்கே போய் அவரின் பின்னூட்ட பெட்டியில் நீங்கள் தயாராக காப்பி செய்து  வைத்திருக்கும் வடை எனக்கே போன்ற கமெண்ட்களை பேஸ்ட் செய்து போஸ்ட் செய்து விடுங்கள்.

அப்புறம் பாருங்கள் வெற்றி உங்களுக்கே...அதிலும் வடை  கிடைக்கவில்லை என்றால் கூட மனம் தளராதீர்கள்...

ஒரு சில நல்ல பதிவர்கள் உங்களை போன்றவர்களுக்காகவே வடை கொடுப்பதில் தாராளமயமாக்கல் கொள்கையை கடை பிடிக்கிறார்கள்.

அதாவது, முதலில் வரும் பின்னூட்டத்திற்கு மட்டுமல்லாமல், இருபத்தைந்து அம்பது எழுப்பத்து ஐந்து  நூறு என்று எல்லா கமன்ட்களுக்கும்  வடை கொடுக்கிறார்கள்.அதற்கு முயற்சி செய்யுங்கள்.அப்படியும் வடை கிடைக்கவில்லையா கவலையே வேண்டாம் ஒரு ஐந்து ரூபாய் சில்லறையை எடுத்துக்கு(வடையின் விலை ஊருக்கு ஊர் மாறுபடும்)  நேரா டீக்கடைக்கு போங்க........சுடசுட வடை கிடைக்கும்.
இருங்க எங்க கிளம்பீட்டீங்க வடை வாங்கவா? .....இவ்வளவு கஷ்டப்பட்டு எழுதியிருக்கேன். ஓட்டும், பின்னூட்டமும் போடாம போனா எப்படி?


விஸ்கி....வ(அ)டச்சே....மன்னிக்கவும் டிஸ்கி: இங்கு வரும் அனைத்து கமன்ட்களுக்கும் தயிர்  வடை, சாம்பார் வடை, மசால் வடை என்று வழங்கப்படும், எனவே யாரும் அவசரமில்லாமல் கமன்ட் போடலாம்.

ஞாயிறு, 12 டிசம்பர், 2010

வாங்க....காலண்டர் செய்யலாம்

நீண்ட நாட்களாக எனக்கு ஒரு ஆசை. ஏதேனும் தொழில்நுட்ப பதிவிடனுமென்று.தொழில்நுட்ப பதிவிற்கு என்றே மிகப்பெரிய ஜாம்பவான்கள் இருக்கும்போது நமக்கு ஏன் இந்த விபரீத ஆசை என்று இருந்துவிட்டேன். சமீபத்தில் ஒரு அருமையான தளம் என் பார்வையில் பட்டது. நமக்கு பிடித்தமானவர்களின் புகைப்படத்தை வைத்து காலண்டர் செய்யும் தளம் அது. புதுவருடம் பிறக்கப்போகும் இவ்வேளையில் நண்பர்களுக்கு பயனளிக்குமே என்று இதை பகிர்ந்துகொள்கிறேன். அந்த தளத்தின் மூலம் என் பையனின் புகைப்படத்தை வைத்து நான் செய்த காலண்டர் கீழே....

இதோ அந்த தளத்திற்கு செல்வதற்கான சுட்டி
இதே போன்ற தொழில்நுட்ப பதிவுகளை அவ்வப்போது பதிவிடலாமென்று இருக்கிறேன். உங்கள் கருத்து என்னவென்று  பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.

ஜெயலலிதா- விஜய் அப்பாவிடம் பேசியது என்ன- வெளிவராத தகவல்கள்.

தமிழின் முன்னணி20 வலைப்பதிவுகள் பட்டியலில் இந்த வாரமும் எனக்கு இடமளித்த(9-தாவது இடம்) தமிழ்மணத்திற்கும், காரணமாக இருந்த சக வலைப்பதிவு நண்பர்களுக்கும் நன்றி. 
நேற்று விஜய்-ஜெயலலிதா சந்திப்பின்பேச்சுக்கள் அடங்கிய  முதல் பாகம் வெளிட்டிருந்தேன். அதன் தொடர்ச்சியாக இன்று இரண்டாம் பாகம் வெளியிடலாமென்று இருக்கும் போது, நம்ம புலனாய்வு புலி கப்சா பாண்டி அவர்கள், விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரின் பேச்சு அடங்கிய சி.டி-யை நமக்கு அனுப்பியிருந்தார். ..... 
ஜெயா-விஜயின் சந்திப்பின் போது நடந்த பேச்சுக்களின் முக்கிய விஷயங்கள்  இப்போது ஜெயா-சந்திரசேகரின் சந்திப்பின் போதும் பேசப்பட்டிருப்பதால் நேரடியாக இதையே வெளியிட்டிருக்கிறோம்.இனி.......

ஜெ; வாங்க...சார்....எப்படி இருக்கீங்க...

ச: நல்லாருக்கேன் மேடம். தம்பி சொல்லுச்சு நீங்க வரச்சொன்னதா.....

ஜெ: ஆமா, ஏன் விஜய் வரலயா.....

ச: அவருக்கு பீகார்ல ஒரு சிலை  திறக்கறாங்க...அதான் அங்கே போயிட்டாரு....அப்படியே பத்துநாள் வெளிநாட்டு டூர் போயிடுவாரு...
.
ஜெ: ரெண்டுநாளுக்கு முன்னாடி நாங்க சந்திச்சோம். அப்போ இது பத்தி சொல்லலியே....

ச: திடீர்னு முடிவு எடுத்து போயிட்டாரு...நம்மட்ட தொழில் கத்துக்கிட்ட ஷங்கரு ஒரு படம் எடுக்கறாரு....அந்தப்படத்துல தம்பிய நடிக்கசொல்லி கேட்டாரு...தம்பியும் சரின்னுருச்சு....அப்புறம் பார்த்தா ஏதேதோ ரூல்ஸ் போட்டாராம் ஷங்கரு.....என் கிட்ட அசிஸ்டெண்டா ஷங்கரு இருக்கப்போ விஜய் சின்ன பய....அப்போ ஷங்கருதான்  கடைக்கு தூக்கிட்டு போயி கமருகட்டும், கல்கோனாவும் வாங்கிக்கொடுப்பாரு...அந்த உரிமையில ஷங்கரு போட்ட கண்டிசனுக்கு விஜய் ஒத்துக்கல....உடனே அவரு கோவமாகி தம்பிய வேனான்னுட்டாராம். போய்யா...திரீ இடியட்சும் வேணாம், போர் இன்டலிஜெண்டும் வேணாம்ன்னு கடுப்பாகி வெளிநாடு போறாரு...

ஜெ:அம்மாவ பார்க்க போகணும் கூட்டணி பத்தி பேசனும்ன்னு   நீங்க தடுத்து நிறுத்த வேண்டியதுதானே.... 

ச: அவரு முடிவெடுத்திட்டா அவரு பேச்ச அவரே கேக்க மாட்டாரு...

ஜெ :ஏன் உங்க மகன் லூசா?

ச : அய்யய்யோ...அப்படிலாம் இல்லை மேடம். எடுத்த முடிவுல உறுதியா இருப்பாருன்னு சொல்ல வந்தேன்.  அதோடு இன்னொரு பிரச்சினை மேடம்,காவலன் ஓடும் தியேட்டர் வாசல்ல ஆம்புலன்ஸ் நிறுத்தி வப்பீங்களா...படம் பாக்கறவங்களுக்கு எதாச்சும் ஆச்சுன்னா என்னபன்றதுன்னு ஒரு நாளைக்கு ஆயிரம் எஸ்.எம்.எஸ். வந்துக்கே இருக்கு. அதான் இந்த தொல்லைலாம் வேணாம்ன்னு கிளம்பிட்டாரு...

ஜெ: அப்படியா....இது கருணாநிதியோட சதியா இருக்கும். சரி நம்ம விஷயத்துக்கு வருவோம். விஜய் கிட்ட பேசிட்டேன். அவரும் நம்ம கூட்டணிக்கு வர சரின்னுட்டாரு...ஆனா சீட்டுதான் கொஞ்சம் அதிகமா கேக்கறாரு....நம்மளோட நிறையா பேரு கூட்டணிக்கு வர்றதால ஒரு முப்பது  சீட்டு உங்களுக்கும், விஜயகாந்துக்கு ஒரு அம்பது சீட்டும் தர்றேன்னேன்.....இல்லேம்மா எல்லா சீட்டையும் என்கிட்டே கொடுங்க....விஜயகாந்துக்கு நாங்க பிரிச்சு கொடுத்துக்கறோம்.விஜயகாந்த் எங்கப்பாவாலதான் மேல  வந்தாரு...அதுனால எங்கப்பா சொல்றத கேப்பாருன்னு சொல்றாரு...
.
ச: உண்மைதான் மேடம் என்கிட்டே நூறு சீட்  கொடுத்திடுங்க...விஜயகாந்துக்கு ஒரு அஞ்சோ பத்தோ கொடுத்துட்டு மீதிய நாங்களே வச்சுக்கவோம்.

ஜெ: நூறா அதெல்லாம் முடியாது...முப்பதுதான் தருவேன். எங்ககிட்டேயும் நிறைய கட்சி கூட்டணியில இருக்கு. வைகோவுக்கு இருபது சீட்டாவதும் கொடுத்தாகணும்.

ச: அவருக்கு எதுக்கு அவ்வளவு சீட்டு...சீட்டும் கொடுத்து வேட்பாளரும் நீங்கதான் கொடுக்கறமாதிரி இருக்கும், போட்டிபோட அவரு கட்சியில ஆளே இல்லையே...

ஜெ: அவரோட சின்சியாரிட்டுக்கு முன்னால ஒ. பன்னீர்செல்வம் கூட நிக்கமுடியாது....அவருக்கு ஒரு கட்சி இருக்கதையே மறந்துட்டு, அவரு அறிவிக்கப்படாத எங்க கட்சியோட கொள்கை பரப்பு செயலாளர் போல நடந்துக்கறார் தெரியுமா? இப்பக்கூட பாருங்க கலிங்கப்பட்டியில ஆளே இல்லாத ஒரு முட்டு சந்துல மீட்டிங் போட்டு கருனாநிதிய திட்டிக்கு இருக்கிறதா ரபி பெர்னாட் சொன்னாரு....அவரோட விசுவாசத்துக்காக வேண்டி இருபது சீட் கொடுக்கத்தான் வேணும். 

ச: அப்படின்னா..ஜெயிச்சதும் துணை  முதல்வரா விஜயை அறிவிச்சுடுங்க.....

ஜெ: அதெல்லாம் முடியாது வேணும்னா கால்நடைத்துறை மந்திரியாக்குறேன்.

ச: அப்படியா சந்தோசம் மேடம், அப்படியே என்னையும் ஒரு மந்திரியா......

ஜெ: ஸ்டாப்.....இதுஎன்ன  கருணாநிதி குடும்பமா எல்லோரையும் மந்திரியாக்குறதுக்கு...சரி...சரி...கேட்டுட்டீங்க....உங்கள சபாநாயகர்  ஆக்கிடுறேன். ....ஆனா ஒரு கண்டிசன்...சசிகலா எப்பவாவது சட்டசபைக்கு வந்தா..நீங்க எந்திரிச்சு உங்க சபாநாயகர் நாற்காலியை  அவங்களுக்கு விட்டுத்தரனும்.

ச; அதெப்படி மேடம் முடியும்...அது தவறான முன்னுதாரணமா ஆகிடுமே...
.
ஜெ: அதுபத்திஎல்லாம் நீங்க கவலை படாதீங்க...இதுக்கு முன்னாடி சபாநாயகரா இருந்த சேடப்பட்டி முத்தையா அப்படித்தான் பண்ணுவாரு...சரியா?

ச: எதுக்கும் விஜய் கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கிட்டு....

ஜெ: ஓகே....நீங்க தாராளமா கிளம்பலாம். முடிவு பண்ணி வையுங்க....நான் செங்கோட்டையனை அனுப்பறேன்...

ச: ரொம்ப நன்றி மேடம்.....

இதற்க்கு  முந்தைய விஜய்-ஜெயலலிதா சந்திப்பு பற்றிய செய்திக்கு இங்கே கிளிக் பண்ணவும்  

சனி, 11 டிசம்பர், 2010

நீங்க ரஜினி ரசிகரா? அப்படின்னா....உங்களுக்குத்தான் இந்த போட்டி


ஜினிகாந்த் பற்றி ஏறக்குறைய தொண்ணூறு சதவீத பதிவர்கள் முக்கியமான தலைப்புக்கள் அனைத்திலும் எழுதி பின்னி பெடலுத்துட்டாங்க. நான்கூட என் பங்கிற்கு ரெண்டு மூணு தலைப்புகளில் எழுதிட்டேன். இருந்தாலும் ரஜினியோட பிறந்தநாள் அன்னைக்கு ரஜினி பற்றி ஒரு பதிவு போடாட்டி பதிவுலகத்திலிருந்து நம்மள தூக்கிருவாங்களோன்னு பயத்துல எதையாவது  வித்தியாசமா எழுதனுமேன்னு கோதாவுல இறங்கிட்டேன்.ரஜினியின்  பாட்டை வச்சு ஒரு போட்டி வைக்கலாம்ன்னு யோசிச்சேன். போட்டின்னதும்சரியான விடை சொன்னா  பரிசு கிரிசுன்னு முடிவு பண்ணீடாதீங்க நண்பர்களே...எல்லா பாட்டுக்கும் சரியா விடை சொல்லிட்டா 'எல்லாத்துக்கும் பதில் சொல்லிட்டோம்ல...ரஜினி ரசிகனா கொக்கான்னு காலர தூக்கிக்கு திரியமட்டும் அனுமதி. போட்டியோட விதிமுற என்னன்னா...பெரிய டீலா நோ டீலா....ரூல்ஸ் ரெகுலசன்லாம் சொல்லிக்கு நேரா விசயத்துக்கு வாப்பான்னு அங்கே நல்லநேரம் சதீஷ் கத்துராப்ல....சரி விஷயத்துக்கு வருவோம். ரஜினி நடிச்ச படத்தின் டூயட் பாட்டு உங்களுக்கு பிடிச்சிருக்கும். அந்த பாட்டோட நடுவுல இருக்க ரெண்டு வரியா உங்களுக்கு தர்றேன். அந்த பாட்டின் முதல் வரியா கண்டு பிடிக்கிறது உங்க வேலை. படத்தையும் சொல்லிட்டா ரஜினிகாந்த் ஆட்டோகிராப் போட்ட  (நானே அவரு கையெழுத்த போட்டு) ஒரு புகைப்படம் அடுத்த வருட கடைசியில் அனுப்பப்படும். ஓகே. ரெடி....ஸ்டார்ட்....மியூசிக்...(பண்ணிக்குட்டியார் மன்னிக்க....)

1) என் காதல் வானிலே..வெண்மேக ஊர்வலம்
    காணுவேன் தேவியை கண்களின்.....


2) கோடையில் நான் ஓடைதானே
   வாடையில்  நான் போர்வைதானே.....


3) மின்னல் உந்தன் பெண்மை எனை தாக்கும் ஆயுதம்
   மேகம் உந்தன் கூந்தல் மலராடும் ஊஞ்சலாம்......


4) வரையறைகளை மாற்றும்  போது
   தலைமுறைகளும்  மாறுமே....


5) உன்னாலே பசிதூக்கமில்லை
   எப்போதும்  நெஞ்சுக்குள்  தொல்லை இனிமே ஏனிந்த எல்லை....


6) மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே....
   மன்னவனின் பசியாற...மாலையிலே பரிமாற....


7) நூறு நூறு தீபமாய் வானில் அங்கு கார்த்திகை....
   வாழும் காதல் சின்னமாய் ஆகும்  எங்கள் யாத்திரை....

 
8) மந்திரங்கள் காதில் சொல்லும் இந்திரனின் ஜாலமோ...
   சந்திரர்கள் சூரியர்கள் போனதென்ன மாயமோ....


9) கார்கால மேகம் வரும்...கல்யாண ராகம் வரும்
   பாடட்டும் நாதஸ்வரம் பார்க்கட்டும் நாளும் சுகம் 

 
10) தெய்வீக பந்தத்திலே நான் கண்ட சொர்க்கம் இது
    காதல் உறவே.....

 
சரி...இனிமே நீங்க கண்டுபிடிச்சு எனக்கு பின்னூட்டம் போட வேண்டியதுதான்.

க்ளு கொடுக்க மாட்டேன்...ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் விடைகள் அனுப்பலாம்.எல்லாமே இலவசம்தான் கட்டணமில்லை...(ஆனால் இன்டர்நெட் பில் நீங்கதான் கட்டனும்)
அதேநேரம் மற்ற நடிகர்களின் ரசிகர்களும் இதில் கலந்து கொள்ளலாம்...தடையில்லை....
விடை தெரியாட்டியும் பரவாயில்லை. வலைப்பதிவின் ஜனநாயக கடமையை ஆற்றிட்டு போயிடுங்க அதாங்க....ஓட்டு போட்டுட்டு போயிடுங்க

வெள்ளி, 10 டிசம்பர், 2010

ஜெயலலிதாவை சந்தித்தார் விஜய்-பரபரப்பு தகவல்கள்.

ன்று புரட்சித்தலைவலி செல்வி ஜெயலலிதாவை இளைய தலைவலி  டாக்டர் விஜய்  கொடநாட்டில் ரகசியமாக சந்தித்ததாக, கொடநாட்டிலேயே கூடாரமடித்து தங்கியிருக்கும் எமது புலனாய்வு புலி கப்சா பாண்டி நமக்கு தகவல் அனுப்பியுள்ளார். மேலும் அவர்கள் என்ன பேசினார்கள் என்று அவர்களுக்கு தெரியாமல் நம்ம கப்சா  பாண்டி தனது  அலைபேசியின்  ரெக்கார்ட் பட்டனை தட்டி அதை விஜயின் கோட்டில் வைத்து மிகவும் துணிச்சலாக பதிவு செய்துள்ளார்.  விக்கிலீக்ஸ் போல விஜய் லீக்ஸ் என்று இந்த ஆப்பரேசனுக்கு பெயர் சூட்டியுள்ளார். அவர்களின் உரையாடல்களை உலக தமிழ் வலைபதிவு வரலாற்றில் முதன் முறையாக தருவதில் நாம் பெருமை கொள்கிறோம். இனி.....

ஜெ என்று வருமிடத்தில் ஜெயலலிதா என்றும், வி என்று வருமிடத்தில் விஜய் என்றும்  அர்த்தம் செய்து கொள்ளுங்கள்.

ஜெ: அடடே வாங்க....விஜய்,  எப்படி இருக்கீங்க....
வி: வணக்கம் மேடம்.

ஜெ: என்ன விஷேசம். இவ்வளவு தூரம் வந்துருக்கீங்க....
வி: சும்மாதான் மேடம், ஒரு இருபது நாளா உங்கள சந்திக்க போயஸ்   கார்டன்  போய்  வாசல்லையே நானும்,எங்கப்பாவும்  உக்கார்ந்து  இருந்தோம் . யாருமே  வந்து கதவை திறக்கல.....

ஜெ: நான் இருந்தாத்தானே கதவ திறப்பாங்க....நீங்க எதுக்கு அங்கே போனீங்க....நான் தேர்தலுக்கு தேர்தல்தான் அங்கே வருவேன்னு உங்களுக்கு தெரியாதா?
வி: நீங்க எந்த கூட்டணி கட்சித்தலைவர் வந்தாலும் வாசலிலே காக்க வச்சு அப்புறம்தான் கதவ திறப்பீங்கன்னு சொன்னாங்க...அதான் நீங்க உள்ளே இருந்துக்கு கதவ திறக்கலியோன்னு நினைச்சோம். நேத்துக்கூட பாருங்க....காலையிலேர்ந்து பச்சத்தண்ணி குடிக்காம போயி உக்கார்ந்திருந்தோம். உங்க வாட்ச்மேன்தான் பரிதாபப்பட்டு ரெண்டு வடையும் டீயும் வாங்கித்தந்தாரு. அப்பறம் அவரு சொல்லித்தான் நீங்க இங்கே இருக்கற விஷயம் தெரியும்.

ஜெ; அடப்பாவமே....சரி...நடந்தது நடந்துருச்சு...இப்ப என்ன செய்தின்னு.....
வி: அதுவந்து மேடம்....நான் நடிச்ச காவலன் படத்தை வெளியிட விடாம இந்த தி.மு.க-காரங்க சதி பண்ணுறாங்க....தமிழ்நாட்டுல இருக்க எல்லா தியேட்டரையும்  அவங்க குத்தகைக்கு எடுத்ததுக்கு எங்களுக்கு ஒரு தியேட்டரு கூட தராம  அழிச்சாட்டியம் பன்றாங்கமேடம்.

ஜெ: உங்க படத்தைவிட இது ரொம்ப கொடுமையா இருக்கே....நீங்க நேரா ஹோம் தியேட்டருல ரிலீஸ் பண்ணிடுங்களேன்....
வி: ஹோம்  தியேட்டரா?

ஜெ: ஆமாங்க....நேரடியா டி.வி.டி. ரிலீஸ் பண்ணிடுங்க....எல்லோரும் அவங்கவங்க ஹோம்  தியேட்டருல பார்த்துக்கட்டும்.
வி: மேடம் பட்ஜெட் கொஞ்சம் பெருசு....டி.வி.டி-ல ரிலீஸ் பண்ணா நிறையா நட்டப்படும்.

ஜெ: என்ன நீங்க புரியாம பேசிட்டு இருக்கீங்க....உங்க படத்த யாரு தியேட்டருக்கு வந்து பார்க்கறாங்க....திருட்டு டி.வி.டி வாங்கித்தான் பார்க்கறாங்க...அதுக்கு நேரடியாவே டி.வி.டி- ரிலீஸ் பண்ணிடலாமேன்னு சொன்னேன். சரி...இப்படி பண்ணினா என்ன?
வி : எப்படி மேடம்?

ஜெ: தேர்தல் அறிவிச்ச உடனே படத்தை வெளியிடுங்கள் என்று ஒரு ஒப்பந்தத்தோடு நீங்க கலைஞர் டி.வி-க்கு வித்துடுங்களேன்.
வி: மேடம் நீங்க போயி அந்த டி.வி-க்கு.....

ஜெ:காரணத்தோட தான் சொல்றேன். தேர்தல் சமயத்துல அவங்க  டி.வி-ல  உங்க படத்தை போட்டா,நீங்க நடிச்சுருக்கத பார்த்து  மக்கள்லாம் கருணாநிதிமேல கடுப்பயிடுவாங்க...அதை பயன்படுத்தி காவலன் படத்தை கலைஞர் டி.வி-யில் வெளியிட்டு மக்களை கொல்லப்பார்த்த கருணாநிதிக்கா உங்க வோட்டுன்னு ஒரு அறிக்கைய விட்டு ஓட்டை அள்ளிட மாட்டோம்.
வி: மேடம் அத விடுங்க...நான் உங்க கட்சியோடு....கூட்டணி வச்சுக்கலாம்ன்னு....

ஜெ: கூட்டணியா....நீங்க கட்சியே ஆரம்பிக்கலயே....
வி:நீங்க கூட்டணிக்கு ஒத்துக்கிட்டா நாளைக்கே ஆரம்பிச்சுட வேண்டியதுதான் மேடம்.

ஜெ : உங்கள நம்பி யாரு ஓட்டு போடுவாங்க...
வி: மேடம் இன்னைக்கு ரஜினிக்கு அடுத்து எனக்குத்தான் மாஸ்

ஜெ: அப்படியா? சந்தோசம். ஓட்டு போடுவாங்களா?
வி: என்ன மேடம் இப்படி கேட்டுட்டீங்க....நான் அரசியலுக்கு வர்றேன்னு ஒரு அறிக்கை விட்டா போதும். அப்புறம் பாருங்க மக்கள் என் பக்கம்தான்.

ஜெ: எப்படி இவ்வளவு நம்பிக்கையா சொல்றீங்க...

அப்போது சசிகலா குறுக்கிட்டு.....
ஆமாக்கா நிஜம்தான். இவரு சினிமாவுல  நடிச்சு மக்களை  தொந்தரவு பண்றாரு, அரசியலுக்கு வந்துட்டா சினிமா பக்கம் வரமாட்டாருல்ல, அதுக்காக வாச்சும் ஓட்டு போடுவாங்க...பேசாம நாம இவரோடவே  கூட்டணி வச்சுக்கலாம்கா...
.
ஜெ: அப்படியா சொல்றே சசி...ஓகே...நம்ம கூட்டணி வச்சுக்கலாம்....

அதன் பிறகு நடந்த திகுதிகு பேரங்கள்....யாருக்கு எத்தனை சீட் போன்ற விபரங்கள் நாளை தொடரும்.