வியாழன், 21 அக்டோபர், 2010

பிரபல பதிவரிடம் ஒரு பேட்டி

கலைஞர் பாணியில் அதாங்க....(கேள்வியும் நானே பதிலும் நானே ) யோசித்ததில் வந்த விளைவு

நான்: உங்க பேரு?
ரஹீம்  கஸாலி: முகம்மது கஸாலி, அழைப்பது கஸாலி

நான் :அப்படின்னா ரஹீம் கஸாலி என்பது?
ரஹீம் கஸாலி:  என் தந்தையின் பெயர் ரஹீம். எல்லோரும் தந்தையின் பெயரின் முதல் எழுத்தை இன்சியலாக வைத்திருப்பார்கள். நான் தந்தையின் பெயரையே இன்ஷியலாக்கி கொண்டேன்.

நான்: வலைப்பதிவிற்கு RAGARIZ- என்று ஹிந்தியில் பெயர் வைத்திருக்கிறீர்களே?
ரஹீம் கஸாலி: அது ஹிந்தி இல்லேங்க....என் தந்தையின் பெயரின் முதல் இரண்டு எழுத்தையும் (RA)  என் பெயரின் முதல் இரண்டு எழுத்தையும்(GA)  என் பையனின் பெயரில் முதல் மூன்று எழுத்தையும்  ( RIZ) சேர்த்து வைத்துக்கொண்டேன்.

நான் : நீங்கள் வலைப்பதிவிற்கு வந்தது ஏன்?
ரஹீம் கஸாலி: கடந்த வருடம்  அவ்வப்போது கிறுக்கியவைகள் யூத்புல் விகடனில் வெளிவந்தது. அதையெல்லாம் தேடி படிப்பது சிரமமாக இருக்கிறது. ஒரே பதிவாக வெளியிட்டால் தேவலை என்று என் நண்பர்கள் சொன்னதால் இங்கே வந்துட்டேன். ஆனால் எனக்கு வலைப்பதிவு   பற்றி ஒன்றுமே தெரியாது. காதை கொண்டாங்க ஒரு ரகசியம் சொல்லணும் நான் பத்தாவது பாதிதான் முடிச்சேன். அதுக்குமேலே படிக்கல...
அதனால இந்த கம்ப்யூட்டர் இன்டர்நெட்டுன்னு ஒண்ணுமே விளங்கல...அப்பத்தான் சென்னையில சாப்ட்வேர் இஞ்சினியரா  இருக்க என் நண்பன் சிராஜ்(பெயரையும் சொல்லியாகனும்ல....இல்லேன்னா நன்றி மறந்தவன் ஆகிடுவேன்)எனக்கு உதவினான். கொஞ்சம் சொல்லிகொடுத்தான். அதுக்கப்புறம் வலைப்பதிவு  பற்றி நண்பர்களின் தளங்களை படித்து பிக்கப் ஆகியாச்சு.ஆர்வக்கோளாருல ஆரம்பிச்சதால தப்பும் தவறுமா போச்சு. அதையெல்லா மூடிட்டு இந்த வலைப்பதிவு ஆரம்பிச்சு மூணு மாசந்தான் ஆகுது.

நான்: நீங்க எந்த கட்சி?
ரஹீம் கஸாலி: மக்களுக்கு யார் நல்லது செய்றாங்களோ அவங்க கட்சி.

நான்: அப்படின்னா நீங்க எந்த கட்சியிலும் இல்லைன்னு சொல்லுங்க....
ரஹீம் கஸாலி: அப்படின்னா....நான் எப்படி எம்.பி-யா ஜெயிச்சிருக்க முடியும்?

நான்: என்னது நீங்க எம்.பி-யா ஜெயிச்சீங்களா? விளையாடாதீங்க
ரஹீம் கஸாலி: நிஜம்தான். எல்லோரும் பண்றாங்களேன்னு நானும் ஒரு வேட்புமனுதாக்கல் பண்ணினேன். என் அதிர்ஷ்டமோ மக்களின் துரதிர்ஷ்டமோ தெரியல...பதினாறு வோட்டு வித்தியாசத்திலே ஜெயிச்சுட்டேன்.

நான்: நம்பவே முடியலியே?எப்ப?
ரஹீம் கஸாலி; என்னாலையும் தான் நான் ஜெயிச்சத நம்பமுடியல. எப்பன்னா....2001-ல

நான்: என்னது 2001-லா அப்ப நாடாளுமன்ற தேர்தலே நடக்கலியே. அப்புறம் எப்படி எம்.பி-யானீங்க?
ரஹீம் கஸாலி: நல்ல கதையா இருக்கு. நீங்க நாடாளுமன்ற தேர்தல்ன்னு நினைச்சீங்கள? நான் சொன்னது ஊராட்சி மன்ற தேர்தல்.

நான்: ஊராட்சி மன்றத்தேர்தலில் எம்.பி-யா என்னங்க குழப்பறீங்க?
ரஹீம் கஸாலி: நிஜம்தான். எம்.பி.ன்னா மெம்பர் ஆப் பஞ்சாயத்து போர்டு. ஒரு படத்துல கவுண்டர் சொல்லுவாரே?

நான்: ஸ்ஸ்ஸ்...அப்பா....இப்பவே கண்ணா கட்டுதே? அப்புறம்?
ரஹீம் கஸாலி: ரெண்டு வருஷம் தாங்க இருந்தேன். அதோடு ராஜினாமா பண்ணிட்டு மலேசியாவுக்கு கிளம்பிட்டேன்.

நான்: ஏன்?
ரஹீம் கஸாலி: பெரிய வருமானம் இல்லைங்க...ஒரு கூட்டத்துல கலந்துக்கிட்டா ஒரு டீ, ரெண்டு வடை கொடுத்து இருபத்து அஞ்சுரூபா சம்பளம் கொடுப்பாங்க...அதிலும் அஞ்சு ரூபா ஊராட்சிமன்ற உதவியாளருக்கு கொடுத்துட்டு மீதி இருபது ரூபாயை எடுத்துட்டு வந்து சிலவு பண்ணுவேன். தினமும் கூட்டம் போட்டாலும் பரவாயில்லை. மாசம் ஏதாவது கிடைக்கும். அங்கே என்னன்னா மாசத்துக்கு ஒரு கூட்டம்தான். அப்புறம் என்ன பண்ணுறது?

இந்த விறுவிறுப்பான பெட்டி தொடரும் (நீங்கள் விரும்பினால்.....)

1 கருத்து: